2-வது கட்ட ஆய்வு: சென்னையில் 32.3 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது - மாநகராட்சி தகவல்
2-வது கட்ட ஆய்வில் சென்னையில் 32.3 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
நாடு முழுதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதா என்பதை கண்டறியவும், மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி எந்தவகையில் உள்ளது என்பதை கண்டறியவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்துகிறது. அந்தவகையில் பல்வேறு மாநிலங்களில் 69 மாவட்டங்களிலும், தமிழகத்தில், சென்னை, கோவை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது.
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நடத்திய, முதற்கட்ட ஆய்வில் 12 ஆயிரத்து 405 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 2 ஆயிரத்து 673 பேர் என, 21.5 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
இதைதொடர்ந்து, 2-வது கட்ட ஆய்வு சமீபத்தில் நடந்தது. அதில் 6 ஆயிரத்து 389 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், 2 ஆயிரத்து 62 பேர் என 32.3 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இருந்தாலும், இந்த நோய் எதிர்ப்பு சக்தி 3 மாதங்கள் வரை தான் என, சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட தகவலை பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story