மாட்டு வண்டியில் பயணம் செய்த முதலமைச்சர் - விவசாயிகள் ஆரவாரம்


மாட்டு வண்டியில் பயணம் செய்த முதலமைச்சர் - விவசாயிகள் ஆரவாரம்
x
தினத்தந்தி 22 Oct 2020 2:16 PM IST (Updated: 22 Oct 2020 2:16 PM IST)
t-max-icont-min-icon

மாட்டு வண்டியில் ஏறி நின்றபடி, மாட்டு வண்டியை ஓட்டி, விவசாயிகள் அளித்த வரவேற்பை முதலமைச்சர் பழனிசாமி ஏற்றுக் கொண்டார்.

புதுக்கோட்டை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். விராலிமலையில் ஜல்லிக்கட்டில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. இதன்நினைவாக விராலிமலையில் சீறிச்செல்லும் ஜல்லிக்கட்டு காளையை ஒரு வீரர் அடக்குவது போன்று நிறுவப்பட்டுள்ள வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார்.

பின்னர், தமிழக மக்களின் 100 ஆண்டு கால கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் மிக முக்கிய அங்கமான 1,088 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குளமான கவிநாடு கண்மாயை அவர் பார்வையிட்டார். 

அதனைதொடர்ந்து. கவிநாடு கண்மாயில் விவசாயிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் பழனிசாமி அவர்களது விருப்பத்தை ஏற்று மாட்டு வண்டி ஓட்டினார்.

மாட்டு வண்டியில் ஏறி நின்றபடி, மாட்டு வண்டியை ஓட்டி, விவசாயிகள் அளித்த வரவேற்பை முதலமைச்சர் பழனிசாமி ஏற்றுக் கொண்டார். இதைப் பார்த்த பொதுமக்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

முன்னதாக, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் 200 மாட்டு வண்டிகளுடன் முதலமைச்சர் பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் 100 ஆண்டுகள் கனவுத் திட்டமான காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அனுமதி அளித்து ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை வந்துள்ள முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கவிநாடு கண்மாயில் 200 விவசாயிகள் மாட்டு வண்டிகளுடன் வந்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

Next Story