சென்னை-சேலம் இடையே விமான சேவை வாரத்தில் 2 நாட்கள் நிறுத்தம்
சென்னை-சேலம் இடையே விமான சேவை வாரத்தில் 2 நாட்கள் நிறுத்தப்படுவதாக ட்ரூ ஜெட் விமானம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேலம்,
சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு தினமும் காலையில் ட்ரூ ஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தின் அனைத்து நாள்களிலும் இயக்கப்பட்டு வந்த சேலம்-சென்னை விமான சேவை வருகிற 25-ந் தேதியில் இருந்து நிர்வாக காரணங்களுக்காக, வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும், 2 நாட்கள் நிறுத்தப்படும் என்றும் ட்ரூ ஜெட் நிறுவன மேலாளர் பிரசன்னா தெரிவித்து உள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில்,
வருகிற 25-ந் தேதி முதல் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை தவிர மற்ற 5 நாள்களில் சேலம்-சென்னை விமான சேவை நடைபெறும். விமான புறப்பாடு மற்றும் விமான வருகை நேரத்திலும் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு சேலத்துக்கு 8.15 மணிக்கு விமானம் வந்து சேரும். மறுமார்க்கமாக சேலத்தில் இருந்து 8.35 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்னைக்கு காலை 9.35 மணிக்கு சென்றடையும். விமான போக்குவரத்து நாட்களில் கடப்பா, விஜயவாடா, மைசூரு மற்றும் பெல்காம் உள்ளிட்ட இடங்களுக்கு இணைப்பு பயணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story