சென்னையில் மின்சார ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் - ரெயில்வே மந்திரிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம்


சென்னையில் மின்சார ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் - ரெயில்வே மந்திரிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 24 Oct 2020 4:45 AM IST (Updated: 24 Oct 2020 4:35 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மின்சார ரெயில் சேவையை மீண்டும் தொடங்கவேண்டும் என்று ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

சென்னைவாசிகள் நகரின் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்வதற்காக அதிகம் நம்பி இருப்பது மின்சார ரெயில் சேவைகளைத்தான். இதனால் மின்சார ரெயில் சேவைகள் மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் மின்சார ரெயில் சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். பஸ், ஆட்டோ, கால்டாக்சி மற்றும் மெட்ரோ ரெயில்களை விடவும் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் மின்சார ரெயில்களில் பயணிப்பதற்கு, பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடை செய்யும் வகையில் கடந்த 7 மாதத்துக்கும் மேலாக மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படவில்லை. அதே சமயத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்களுக்காக மட்டும் மிகவும் குறைவான ஒரு சில எண்ணிக்கையில் மட்டும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் சாதாரண பயணிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் அவர்கள் போக்குவரத்துக்காக கடும் இன்னலை சந்திக்கவேண்டிய நிலை உள்ளது.

புறநகரில் இருந்து நகர்ப்புற பகுதிக்கு வருவதற்கும், நகர்ப்புற பகுதியில் இருந்து புறநகர் பகுதிக்கு செல்வதற்கும் பயணிகள் வழக்கமான தொகையை விடவும் பல மடங்கு அதிகமான கட்டணம் தற்போது போக்குவரத்துக்காக செலவிடவேண்டியுள்ளது. மேலும் திக்குமுக்காடும் நிலையும் தொடர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மராட்டிய மாநிலம் மும்பையில் புறநகர் மின்சார ரெயில் சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டது.

இதனால் சென்னையிலும் மின்சார ரெயில் சேவைகளை இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் மின்சார ரெயில்களை மீண்டும் இயக்கவேண்டும் என்று வலியுறுத்தி ரெயில்வே மந்திரிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதிய அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலத்துக்கு வெளியேயும் தெற்கு ரெயில்வே தற்போது ரெயில்களை இயக்கி வருகிறது. அதே சமயத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்காக மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்காக மின்சார ரெயில்களை மீண்டும் இயக்கவேண்டும் என்று கடந்த மாதம் 2-ந் தேதி மாநில அரசு உங்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. மின்சார ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகுந்த உதவியாக இருப்பதோடு, பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கும் உதவிக்கரமாக இருக்கும்.

எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி, மின்சார ரெயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான அறிவுறுத்தல்களை தெற்கு ரெயில்வேக்கு நீங்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story