பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி - கே.எஸ்.அழகிரி


பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி - கே.எஸ்.அழகிரி
x
தினத்தந்தி 26 Oct 2020 10:54 AM IST (Updated: 26 Oct 2020 10:54 AM IST)
t-max-icont-min-icon

பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளிட்டுள்ளார்.

சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்தை தாண்டியிருக்கிறது. பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில், கடுமையான பாதிப்பை இந்தியா சந்தித்து வருகிறது. 

இதையெல்லாம் மூடி மறைக்கிற வகையில், கொரோனா உயிரிழப்புகளை குறைத்ததின் மூலம் இந்தியா சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திரமோடி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்போகிறார்கள். அதேபோல, 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதற்கு முன்னோட்டமாக பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு பெற்ற நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது.

நரேந்திரமோடிக்கு எதிராக அரசியல் காற்று வீச ஆரம்பித்துவிட்டது. மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையில் ஈடுபாட்டுள்ள கட்சிகளுக்கு நம்பிக்கையூட்டுகின்ற வகையில் பீகார் தேர்தல் முடிவுகள் வெளிவரப் போகின்றன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story