சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி - சிபிஐ அறிக்கை தாக்கல்


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி - சிபிஐ அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 26 Oct 2020 5:18 PM IST (Updated: 26 Oct 2020 5:18 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி செய்துள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான்குளத்துக்கும், கோவில்பட்டிக்கும் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மதுரை ஐகோர்ட்டில் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது தொடர்பாக சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

* சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவலர்கள் மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டதாலேயே இருவரும் உயிரிழந்தனர். 

* காவல்நிலையத்தின் கழிப்பறை, சுவர்கள், லத்தி, மேஜைகள் என பல்வேறு இடங்களில் கிடைத்த ரத்தமாதிரிகள் தந்தை - மகன் டி.என்.ஏ உடன் ஒத்துப்போவது தெரியவந்துள்ளது.

* ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் ரத்தம் படிந்த துணிகளை தூய்மைப்படுத்தி தடயங்களை மறைக்க போலீசார்  முயற்சி செய்துள்ளனர். 

* சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story