அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: தலைவர்கள் இரங்கல்
அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு, பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை.
தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் நீத்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது.
பாபநாசம் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைக்கண்ணு அவர்கள், தமிழ்நாடு அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மிகவும் எளிமையானவர், தன்னடக்கம் மிக்கவர், அனைவரையும் மதிக்கின்ற பண்பாளர். அவரது மறைவினால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.
வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், வேளாண் துறை அமைச்சர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டவர் அமைச்சர் துரைக்கண்ணு. அவரது குடும்பத்தினருக்கும், அதிமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் துரைக்கண்ணு மறைவு தஞ்சை மாவட்டத்திற்கும் அதிமுகவிற்கும் பேரிழப்பாகும் என த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் துரைக்கண்ணு மறைவால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் என்று திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story