நமது நாட்டில் விவசாயம் அனாதை ஆக்கப்பட்டு வருகிறது - மதுரை ஐகோர்ட் கிளை வேதனை
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான், லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை
தமிழகத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய போதுமான கொள்முதல் நிலையங்கள் இல்லை எனவே போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு, வழக்கு குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணையின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குனர் சுதாதேவி தாக்கல் செய்த பதில் மனுவில் 862 கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ளது என்றும், மேலும் கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார்.
அதேபோல் நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது தவறான தகவல் என்றும், அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்காணிக்க 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த அறிக்கையை படித்த நீதிபதிகள் கோபமடைந்து, "இந்த அறிக்கையில் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது தவறான தகவல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வரியில் ஊழல் அதிகாரிகளை கண்காணிக்க குழு அமைத்து முறைகேடில் ஈடுபட்ட 105 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது" என்று சுட்டிக்காட்டினர்.
"முறைகேடு நடைபெறவில்லை என்றால் 105 அதிகாரிகள் மீது ஏன்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது போன்ற தவறான தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்கும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.
விவசாயிகள் இரவு பகல் என விழித்து பாம்புக்கடி போன்ற வலி வேதனைகளை அனுபவித்து விவசாயம் செய்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்தால் வாங்குவதற்கு வக்கில்லாமல் விவசாயிகளிடம் லஞ்சம் பெற்று பிச்சை எடுத்து வருகின்றனர்.லஞ்சம் வாங்குவது சாதாரண விஷயமாகவும் லஞ்சம் வாங்காத அவர்களை சமூகத்தில் பிழைக்கத் தெரியாதவன் என்றும் வேலை தெரியாதவன் என்று கேலி செய்து வருகின்றனர் சமூகத்தில் லஞ்சம் என்பது புற்றுநோயை விட கொடிய நோயாக பரவிக் கொண்டிருக்கின்றது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், "இது போன்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அத்தகைய தண்டனை விதிக்கப்பட்டால்தான் குற்றம் குறையும். நமது நாட்டில் விவசாயம் அனாதை ஆக்கப்பட்டு வருகிறது. 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதில்மனுவில் குறிப்பிடும் போது கொள்முதல் செய்யப்படும் நெல் மூடை ஒன்றுக்கு 30 முதல் 40 ரூபாய் வரை ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்பதை முற்றிலும் தவறான தகவல் என எப்படி கூற முடியும்? இது தவறான தகவலை அளிப்பதாகாதா? என்று நீதிபதிகள் கேட்டனர்.
இவ்வாறு உள்ள சூழலில் தமிழக அரசின் அறிக்கை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று கூறிய நீதிபதிகள், கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? எவ்வளவு பணம் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது? எனஅரசின் சார்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் எதிர் மனுதாரராக வேளாண் துறை செயலாளரை சேர்க்கவும், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கபட்ட குழு, அரசு துறைகளில் லஞ்ச ஒழிப்பு குறித்து ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story