முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவை வருகை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை (வியாழக்கிழமை) மாலை கோவை வருகிறார். அவர் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
கோவை,
கொரோனா தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டந்தோறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று ஆய்வுகூட்டம் நடத்தி வருகிறார். அவர், நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நாளை (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் கோவை வருகிறார்.
அவர், கார் மூலம் மேட்டுப்பாளையம் சென்று பிளாக் தண்டரில் உள்ள மாளிகையில் நாளை இரவு தங்குகிறார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார். அவர், ஊட்டியில் உள்ள தமிழக மாளிகையில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறார்.
இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த அரசின் வளர்ச்சி திட்டப்பணிகளையும், புதிய பணிகளையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர், விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினருடன் ஆலோசனை நடத்து கிறார். நீலகிரி மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நாளை மறுநாள் மாலை திருப்பூர் மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்று அந்த மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்கிறார். அவர், 6-ந்தேதி இரவு கோவை ரெட்பீல்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். 7-ந் தேதி காலை 7.40 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
முதல்-அமைச்சர் வருகையை தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தலைமையில் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்- அமைச்சருக்கு அளிக்கும் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Related Tags :
Next Story