தடையை மீறி வேல் யாத்திரை : தலைவர்கள் கைதானால் போராட்டத்தில் ஈடுபடுங்கள் என நிர்வாகிகளுக்கு பா.ஜ.க தலைமை உத்தரவு என தகவல்
தமிழகத்தில் தடையை மீறி யாத்திரையை நடத்தவும், கைது செய்தால் மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
இந்து மத கடவுள் முருகனை புகழ்ந்து பாடும், கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய, கருப்பர் கூட்டத்தினர், அவர்களின் பின்னால் உள்ளவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி,
பா.ஜ.க., தலைவர் எல்.முருகன் ‘வெற்றிவேல் யாத்திரை’ மேற்கொள்ள போவதாக அறிவித்த்தார். இன்று (வெள்ளிக்கிழமை) திருத்தணியில் தொடங்கி, டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் யாத்திரையை முடிப்பதாக கூறி இருந்தார். ஆனால், யாத்திரைக்கு, தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. பா.ஜ.க. அறிவித்துள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது.
எனினும், திட்டமிட்டபடி யாத்திரையை துவக்க, பா.ஜ.க., தலைவர் முருகன் முடிவு செய்துள்ளார். அவ்வாறு அவர், யாத்திரையை துவக்க முயன்றால், போலீசார் அவரை கைது செய்வர். அவர் கைது செய்யப்பட்டால், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த, கட்சி நிர்வாகிகளுக்கு, பா.ஜ.க., தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யாத்திரைக்கு அனுமதி வழங்கினால், ஆர்ப்பாட்டம் தேவையில்லை. இல்லையேல், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் எதிரே ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் அவ்வப்போது, கட்சி தலைமையிடம் இருந்து உத்தரவு வரும் என, கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காவல்துறை அனுமதித்தால் பாஜக வேல் யாத்திரையை நடத்தும்; இல்லையெனில் போராட்டம் நடைபெறும் எனவும் இந்துக்களை இகழ்வாக பேசும் ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே வேல்யாத்திரை என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. நிபந்தனைகளுக்குட்பட்டுதான் வேல் யாத்திரையை பாஜக தொடங்க உள்ளதாக சென்னையில் வி.பி.துரைசாமி கூறினார். மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக தொடருமா என்ற கேள்விக்கு அதுவேறு, வேல் யாத்திரை வேறு என வி.பி.துரைசாமி பதில் அளித்தார்.
Related Tags :
Next Story