கல்லூரிகள் திறப்பு குறித்து நவ.12ஆம் தேதி முடிவு - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
நவம்பர் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையா? என்பது பற்றி 12-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்தநிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பள்ளிகளில் வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என பள்ளிகளைத் திறக்க பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் ஆசிரியா் கழக நிர்வாகிகள், பெற்றோர், பெற்றோர் பள்ளிகள் நிர்வாகம் ஆகியோரின் கருத்துகளைக் கேட்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் இன்று கருத்துக் கேட்கப்படும் நிலையில் கல்லூரிகள் திறப்பு பற்றி கேள்வி எழுந்துள்ளது.
செய்தி ஊடகம் ஒன்றுக்கு பதிலளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், நவம்பர் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? என்பது பற்றி வரும் 12-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று பதிலளித்துள்ளார்.
கருத்துக்கேட்பு நிகழ்ச்சியில் பெரும்பாலான பெற்றோர்கள் பருவமழை நேரம் என்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் பள்ளிகள் திறக்கக் கூடாது எனவும், ஜனவரி மாதத்தில் திறக்கலாம் என்றும் தெரிவித்தனர். ஒரு சில பெற்றோர் பிள்ளைகளின் படிப்பு வீணாவதால் உடனடியாக பள்ளி திறக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதி அறையில் தலா ஒரு மாணவர் மட்டுமே தங்கவேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு நிபந்தனை விதித்துள்ளது. நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் உயர்கல்வித்துறை குழப்பம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திட்டமிட்டபடி கல்லூரிகள் திறக்கப்படுமா? மற்றும் விடுதிகள் செயல்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.
Related Tags :
Next Story