தனக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்தால் போதும்: நடிகர் சூரி தரப்பு கோரிக்கை


தனக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்தால் போதும்: நடிகர் சூரி தரப்பு கோரிக்கை
x
தினத்தந்தி 9 Nov 2020 2:46 PM IST (Updated: 9 Nov 2020 2:46 PM IST)
t-max-icont-min-icon

தனக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்தால் போதும் என்றும், நடவடிக்கை வேண்டாம் என்றும் நடிகர் சூரி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

நடிகர் சூரிக்கு தரவேண்டிய 40 லட்சம் சம்பள பாக்கிக்கு பதிலாக நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.70 கோடி மோசடி நடந்துள்ளதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் 'வீர தீர சூரன்' படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மீது அடையாறு போலீசார் வழக்குபதிவு செய்தனர். 

நடிகர் விஷ்ணு விஷால் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மீதான ரூ.2.70 கோடி மதிப்பிலான நிலமோசடி புகாரை சிபிஐ விசாரிக்க கோரி நடிகர் சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்பதால் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னுடைய முன்ஜாமீன் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக ரமேஷ் குடவாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, அவர் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பின்னர் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் முன்ஜாமீன் மனு தொடர்பாக நவம்பர் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணையின் போது, சூரி தரப்பிடம் நீதிபதி, ‘இந்த வழக்கில் பணம் திருப்பிக் கொடுத்தால் போதுமா அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டுமா?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு சூரி தரப்பில் , ‘பணம் திரும்பக் கிடைத்தால் போதும். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல’ என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நவ 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story