இலங்கை அரசுடன் பேசி 121 தமிழக படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
இலங்கை அரசுடன் பேசி 121 தமிழக படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திரமோடிக்கு இ-மெயில் வழியாக கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதி மீனவர்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியை தங்கள் உடனடி கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை கடற்படை அத்துமீறி வந்து, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தி 600-க்கும் மேற்பட்ட மீனவர்களை கொன்று நூற்றுக்கணக்கானவர்களை பிடித்துக்கொண்டு போய் இலங்கை சிறைகளில் அடைத்தனர். அவர்களது படகுகளை பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு மீன்பிடி படகும் ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் பெறுமதியானவை. தமிழக மீனவர்கள் கடன் வாங்கி, அதற்காக வட்டி கட்டி வருகின்றார்கள். அந்த படகுகள்தான் அவர்களது வாழ்வாதாரம்.
இப்போது, 121 படகுகளை உடைத்து நொறுக்க இலங்கை நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எனவே, இந்திய அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு, அந்த படகுகளை மீட்டுத்தர வேண்டும். அல்லது அதற்கு இழப்பீட்டு தொகை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 121 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
இலங்கை அரசும், நீதிமன்றமும் ஒரு சில மாதங்கள் கால அவகாசம் கொடுத்து, அதற்குள்ளாக 121 படகுகளையும் எடுத்துச் செல்லும்படி ஆணையிட்டிருந்தால், இந்த பிரச்சினைக்கு மிகவும் எளிதாக தீர்வு காணப்பட்டிருக்கும். ஆனால், தமிழக மீனவர்களின் நிலைப்பாடு குறித்து எதுவும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து படகுகளை அழிக்க ஆணையிட்டிருப்பதுதான் மீனவர்கள் தரப்பில் பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சீரமைக்க மானியம்
எனவே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து படகுகளையும் சீரமைத்து எடுத்துச் செல்வதற்கு தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசும், நீதிமன்றமும் அவகாசம் வழங்கவேண்டும். இந்த அனுமதியை இலங்கையுடன் பேசி மத்திய, மாநில அரசுகள் பெற்றுத்தர வேண்டும்.
அதேநேரத்தில், இலங்கை துறைமுகங்களில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதால் அவற்றை சீரமைத்து அங்கிருந்து எடுத்துவருவது மிகவும் சவால் நிறைந்ததாகும். அதற்கு பெரும் பொருட்செலவும் ஆகும் என்பதால், ஒவ்வொரு மீன்பிடி படகையும் சீரமைத்து எடுத்துவர ஒரு குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விஜயகாந்த்
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 121 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதில், மத்திய - மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட நல்ல தீர்ப்பு வழங்கி, தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசு இலங்கையுடன் உள்ள நல்லுறவைப் பயன்படுத்தி தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு மீனவர்களிடம் வழங்கிட உரிய நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டுகிறோம்” என்று கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Related Tags :
Next Story