தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் இன்று திறப்பு
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சினிமா தியேட்டர்கள் திறக்கப் படுகின்றன.
சென்னை,
கொரோனா பரவலால் தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன. சமீபத்தில் அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது.
இதையடுத்து 7 மாதங்களுக்கு பிறகு பெரிய எதிர்பார்ப்போடு தமிழ்நாடு முழுவதும் இன்று (10-ந் தேதி) தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. கடந்த சில தினங்களாக தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன. பழுதான இருக்கைகளும் மாற்றப்பட்டன.
50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதால் இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டி தடுத்து வைத்துள்ளனர்.
டிக்கெட் முன்பதிவுகள் இரண்டு தினங்களாக நடைபெற்று வந்தன. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் உள்ள 1,140 தியேட்டர்களையும் இன்று திறக்க தயார்படுத்தி உள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு படம் பார்க்க தியேட்டர்களுக்கு வருவார் களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தீபாவளிக்கு புதிய படங்கள் திரைக்கு வரவில்லை. எம்.ஜி.ஆர் மகன், பிஸ்கோத், இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2, களத்தில் சந்திப்போம், மரிஜுவானா உள்ளிட்ட படங்கள் தீபாவளிக்கு வெளியாக தயாராக இருந்தன. ஆனால் வி.பி.எப் கட்டண பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததால் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் பாரதிராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தற்போது வி.பி.எப் சம்பந்தமாக அனைத்து தரப்புகளின் நிலைப்பாட்டின் காரணமாக புது திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்தநிலையில் தமிழக அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் சமீபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் திரையரங்கு உரிமையாளர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த கால கட்டத்தை கருத்தில் கொண்டு ஒரு வருட காலத்திற்கு தற்காலிக தீர்வு ஒன்றை எங்கள் நிலைப்பாட்டில் இருந்து கீழே இறங்கி முன்வைத்தோம். எனினும் பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்தும் சுமுகமான தீர்வு எட்டப்படாததால் மீண்டும் தயாரிப்பாளர்களோடு கலந்து ஆலோசித்ததில் நல்ல தீர்வு ஏற்படும்வரை புது படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்”
இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.
புதிய படங்கள் வெளியாகாத நிலையில் ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றி பெற்ற ரஜினிகாந்தின் சிவாஜி, கமல்ஹாசனின் பாபநாசம், விஜய்யின் துப்பாக்கி, பிகில், அஜித்குமாரின் விஸ்வாசம், தனுசின் அசுரன் மற்றும் தாராள பிரபு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பரியேறும் பெருமாள் போன்ற படங்களை திரையிட தியேட்டர் அதிபர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்தநிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 7 மாதங் களுக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளது. இந்த சமயத்தில் வி.பி.எப். கட்டணம் தொடர்பான பிரச்சினை எழுப்புவது உகந்தது அல்ல. கால அவகாசம் குறைவாக உள்ளதால் தற்போது புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் அனுமதிக்க வேண்டும். வி.பி.எப். தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள், பட தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக முடிவு எடுத்தால் நல்லது தான். இல்லையென்றால், முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று இருதரப்பினரையும் அழைத்து பேசி சுமுக தீர்வு காண்பதற்கு அரசு ஏற்பாடு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story