அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா ஆலோசனைக் குழுவில் இடம்பெற்ற ஈரோடு பெண் டாக்டர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ள கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழுவில் ஈரோடு பெண் டாக்டர் இடம்பெற்றுள்ளார். இதனால் அவரது பூர்வீக கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஈரோடு,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் இந்தியரான டாக்டர் செலின் கவுண்டர் என்கிற செலின் ராணி கவுண்டர் இடம்பிடித்திருக்கிறார். 43 வயதாகும் செலின் கவுண்டர், அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியாளராக உள்ளார். அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குனராகவும் இருக்கிறார்.
புதிய அதிபர் ஜோ பைடனின் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்று இருக்கும் டாக்டர் செலின் கவுண்டர், இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்து இருக்கிறார்.
இவரது தந்தை நடராஜ், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர். தங்கள் கிராமத்து பெண், அமெரிக்க நாட்டில் ஓர் உயரிய பொறுப்பில் வந்து இருப்பது இந்த கிராமத்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நேற்று டாக்டர் செலின் குறித்த செய்தி அறிந்து, மொடக்குறிச்சி பெருமாபாளையம் பகுதியில் உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். தூரபாளையம் கிராமத்தில் வசித்துவரும் டாக்டர் செலினின் பெரியப்பா மகள் அன்னபூரணி, கிராமத்து மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
இதுவரை 4 முறை டாக்டர் செலின் மொடக்குறிச்சிக்கு வந்து உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.
Related Tags :
Next Story