ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா - பொதுப்பணித்துறை தீவிரம்
ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.12 கோடியில் 13 ஆயிரம் சதுர அடியில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந்தேதி, சென்னை, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தனர். தற்போது இந்தப்பணி நிறைவடையும் நிலையை எட்டி உள்ளது. 9 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 50 ஆயிரத்து 422 சதுர அடியில் நினைவிடம் அமைந்துள்ளது. இதில் பீனிக்ஸ் பறவை போன்ற கட்டுமானம் ராட்சத வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது.
இதனைத்தொடர்ந்து நினைவிட வளாகத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா ஒன்றும் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வரைபடங்களை பொதுப்பணித்துறை அரசுக்கு அனுப்பி அரசு உத்தரவை எதிர்நோக்கி உள்ளது. உத்தரவு கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஜெயலலிதா நினைவு மண்டபம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. ஓரிரு வாரங்களில் பணிகள் நிறைவடைந்து அரசிடம் முறையாக நினைவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்தநிலையில் நினைவிட வளாகத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பொதுமக்களுக்கு ஆற்றிய பணிகளை அடுத்த தலைமுறையினரும் தெரிந்துகொள்வதற்காக நினைவிட வளாகத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுத்திறன் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
இந்த 2 கட்டிடங்களும் ரூ.12 கோடி மதிப்பில் சுமார் 13 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமையவிருக்கிறது. இதற்கான வரைபடங்கள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கான நிதி ஒதுக்கப்படும். அரசு உரிய நிதியை ஒதுக்கி, அரசாணை பிறப்பித்தவுடன் 40 முதல் 50 நாட்களில் இந்தப்பணியை நிறைவு செய்ய இருக்கிறோம்.
நினைவிடத்தில் அமைக்கப்பட்டு உள்ள ராட்சத பீனிக்ஸ் பறவையின் கட்டுமானத்தின் வடக்கு திசையில் அருங்காட்சியகமும், தெற்கு திசையில் அறிவுசார் பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. நினைவிடத்தையும், அருங்காட்சியகத்தையும் பார்வையாளர்கள் பார்வையிட்டு பின்னர் அறிவுசார் பூங்காவை பார்த்துவிட்டு வெளியே செல்லும் வகையில் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் குழந்தை பருவம், பள்ளி பருவம், நடிகை மற்றும் முதல்-அமைச்சராக இருந்த காலங்களில் எடுக்கப்பட்ட அபூர்வ புகைப்படங்கள், அவர் படித்த புத்தகங்கள், வீடியோ மற்றும் ஆடியோ ஒலி, ஒளி காட்சிகள், பொதுமக்களுக்கு செய்த நலப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெறும் வகையில் அமைக்கப்படுகிறது. வருங்கால தலைமுறையினர் ஜெயலலிதாவை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இவை உதவும். இந்தப்பணியை திறம்பட முடிக்க பொதுப்பணித்துறையும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story