சாலையில் நின்று வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்: 2 மணி நேரத்தில் அரசு வேலை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி!
சாலையில் நின்று வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு 2 மணி நேரத்தில் அரசுப்பணிக்கான ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது சாலையோரம் கையில் கோரிக்கை மனுவுடன் காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை காரை நிறுத்தி விசாரித்த முதலமைச்சர் பழனிசாமி அடுத்த 2 மணி நேரத்தில் அவருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
தூத்துக்குடியில் இன்று காலை ரூ.367.75 கோடி திட்டப் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ 16 கோடியில் அமைக்கப்பட்ட புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் நேரியல் முடுக்கி என்ற நவீன கருவியின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது வழியில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் சாலையோரம் கையில் மனுவுடன் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நின்றிருந்ததைக் கவனித்த முதலமைச்சர் பழனிசாமி காரை உடனடியாக நிறுத்தச் சொல்லி அப்பெண்ணை அழைத்து விசாரித்தார்.
அந்தப் பெண்மணி தன்னை முத்தையாபுரத்தைச் சேர்ந்த மாரீஸ்வரி என்றும் கணவர் சின்னத்துரை கூலி வேலை பார்ப்பதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். தங்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை இருப்பதாகவும், கணவரின் கூலி வேலை வருமானம் குடும்பத்துக்கு போதாததால் தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று கோரி மனுவினை அளித்தார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர், அப்பெண்ணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருமாறு கூறினார்.
பின்னர், சுகாதாரத்துறையின் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டு மேலாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் அப்பெண்ணிடம் வழங்கினார். இதனை எதிர்பார்க்காத அப்பெண் அரசு வேலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தார்.
மேலும், இந்தப் பணியின் மூலம் மாதம் ரூ.15,000 ஊதியமாகக் கிடைக்கும் என்றும், எனவே இந்த ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும்" என அப்பெண்ணுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.
கோரிக்கை மனு அளித்த 2 மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட சம்பவம் கட்சியினர் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து மாரீஸ்வரி, தனது வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் மனு அளித்தவுடன் எனது கோரிக்கையினை ஏற்று உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணியினை வழங்கிய முதலமைச்சருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
Related Tags :
Next Story