தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு நான் காரணம் என்பதா? - முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு நான் காரணம் என்பதா? - முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 12 Nov 2020 4:45 AM IST (Updated: 12 Nov 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு நான் காரணம் என்பதா? என்று முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு முழுமுதற் காரணமே அ.தி.மு.க. ஆட்சி தான்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை, 

இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் ஜனநாயக ரீதியில் அறப்போராட்டம் நடத்திய அப்பாவிப் பொதுமக்களை எந்தவிதக் காரணமுமின்றிச் சுட்டுவீழ்த்தி, 13 பேர் படுகொலைக்கு முழுக் காரணமாக இருந்து விட்டு, இப்போது தேர்தல் நெருங்குகின்றது என்றதும், ‘இந்தச் சம்பவம் நடப்பதற்கு நான் தான் நூற்றுக்கு நூறு சதவீதம் காரணம்’ என்று என் மீது பச்சைப் பொய் கூறி குற்றம் சாட்டி, நீலிக் கண்ணீர் வடித்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போலீஸ் வேன்களில் நின்றெல்லாம் பொதுமக்களை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்த அராஜகக் காட்சியை நாடே பார்த்துக் கொண்டிருந்ததை மறந்துவிட்டு, அந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க ஓர் ஆணையத்தை அமைத்து, எங்கே உண்மைகள் வெளிவந்துவிடுமோ என பயந்து அதையும் முடக்கி வைத்துள்ள முதல்-அமைச்சர் இப்படி உலக மகா பொய் சொல்லலாமா?

ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் வருவதற்கு முழு முதற்காரணம் அ.தி.மு.க. ஆட்சி. ஸ்டெர்லைட் ஆலை அமைக்கத் தடையின்மை சான்றிதழை கொடுத்ததும், ஆலை அமைப்பதற்குச் சுற்றுப்புறச்சூழல் அனுமதி வழங்கலாம் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்ததும் அ.தி.மு.க. அரசுதான். இதனடிப்படையில் ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த அ.தி.மு.க. அரசின் கீழ் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆலை அமைப்பதற்கு 22.5.1995 அன்று ஒப்புதல் ஆணை வழங்கியது. முத்தாய்ப்பு வைத்தாற் போல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டித் திறந்து வைத்தவர் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாதான். அப்படித் திறந்து வைத்த போது, தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சிப் பாதையில் மேலும் ஒரு புதிய மைல்கல் என்று பேசியதும் ஜெயலலிதாதான்!

2013-ம் ஆண்டில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட 3 பேர் கமிட்டியில் இருந்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலாளர், ஆலை பாதுகாப்பாக இருக்கிறது. விதிமுறை மீறல் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்.

அதன் அடிப்படையில்தான் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது. இப்போது பச்சை ரத்தம் குடிக்கத் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரைக் கொன்றதும் அ.தி.மு.க. ஆட்சிதான், அதுவும் பழிக்கஞ்சாத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிதான்.

ஆகவே ஸ்டெர்லைட் பற்றிய அடிப்படை உண்மைகூடத் தெரியாமல் திரித்துப் பேசலாம், பொய் புரட்டுக்களைப் பொது மேடையில் நின்று கொண்டு உண்மை போல் ஆவேசமாக சத்தம் போட்டுப் பேசலாம், மக்களைத் திசைதிருப்பலாம் என்று முதல்-அமைச்சர் பகல்கனவு கண்டால், அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது.

‘நீர் மேலாண்மைக்கு தி.மு.க. என்ன செய்தது?’, என்று இன்னொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 1967 முதல் 1976 வரை கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த போதுதான். 20 அணைகள் கட்டப்பட்டன. பிறகு 1989 முதல் 2011 வரை 22 அணைகள் என தி.மு.க. ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டன. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கட்டிய ஒரு அணையின் பெயரைச் சொல்ல முடியுமா?

எனவே, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்த அப்பாவி மக்களில் 13 பேரைச் சுட்டுக் கொன்று விட்டு ‘நான் டி.வி.யில்தான் அதைப் பார்த்தேன்’, என்று கூறுவதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவிர்க்க வேண்டும். அரசு விழாக்களில் அரசியல் நாகரிகத்தைத் தூக்கியெறிந்து விட்டு இப்படி எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற புகார்கள் சொல்வதைக் கைவிட வேண்டும்.

தூத்துக்குடி மக்களின் மீது அவருக்குக் கோபம் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சுட்டதற்காக அமைக்கப்பட்ட கமிஷன் விசாரணையை முடக்கிப் போட்டிருக்கலாம். ஆனால் தங்களது உயிர்களைக் கப்பாற்றிக் கொள்ள தங்களது சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாத்துக் கொள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்திட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story