ரூ.1.62 கோடி மோசடி வழக்கு: சென்னை போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கணேசன் கைது


ரூ.1.62 கோடி மோசடி வழக்கு: சென்னை போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கணேசன் கைது
x
தினத்தந்தி 12 Nov 2020 7:16 AM IST (Updated: 12 Nov 2020 7:16 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1.62 கோடி மோசடி வழக்கில் சென்னை போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கணேசனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், 2011-16-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசின் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றினார். இக்காலகட்டத்தில் போக்குவரத்து துறையில் 81 பேருக்கு டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.62 கோடி பணம் மோசடி செய்துவிட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த மோசடி வழக்கு குறித்து விசாரணை நடத்தினர். செந்தில் பாலாஜி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு சொந்தமாக கரூரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. சென்னை, மந்தைவெளியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தி சீல் வைக்கப்பட்டது. மடிக்கணினி, பென் டிரைவ், மெமரி கார்டு உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதற்கிடையில் இந்த மோசடி புகாரில் சென்னை போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கணேசன் பெயர் பெரிதாக அடிபட்டது. அதனை தொடர்ந்து சென்னை, முகப்பேர் ஜீவன் பீமா நகரில் உள்ள அவரது வீட்டில் பல மணி நேரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையிலும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

அதனை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கணேசன் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையில் அவரது வாக்குமூலமும் பெறப்பட்டது. அதன் பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

இந்த மோசடி வழக்கு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கணேசனிடம் மீண்டும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டனர். அதன்படி, கணேசனிடம் நேற்று மாலை போலீசார் 2-ம் கட்டமாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு அடுத்தபடியாக நடந்த இந்த விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் கணேசன் வெளியிட்ட தகவல்களில் பண மோசடி நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் பல முக்கிய புள்ளிகள் விசாரிக்கப்படுவார்கள் என்றும், தேவைப்பட்டால் அதிரடி கைது நடவடிக்கை பாயும் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் வரையில் நடந்த இந்த சோதனையில் தமிழகத்தில் 54 அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.4 கோடியே 29 லட்சத்து 98 ஆயிரத்து 892 ரொக்கப்பணம், 519 பவுன் நகை, 6½ கிலோ வெள்ளி மற்றும் வங்கி இருப்பு விவரங்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது போக்குவரத்து துறையில் நடந்துள்ள பண மோசடியில் உயர் அதிகாரி ஒருவர் கைதாகி இருப்பதும், மேலும் கைது நடவடிக்கை பாயும் என்று வெளியாகும் தகவல்களும் மீண்டும் ஒரு பரபரப்பை பற்ற வைத்திருக்கின்றன.


Next Story