அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் - கனிமொழி எம்.பி. கண்டனம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்தில் இருந்து அருந்ததி ராய் எழுதிய புத்தகம் நீக்கப்பட்டதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிரபல இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய, “வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்”(Walking with Comrades) என்ற புத்தகம், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. முதுகலை ஆங்கிலம் படிப்பிற்கான 3வது செமஸ்டரில் இந்த புத்தகம் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த புத்தகத்தின் சில பகுதிகளில், மாவோயிஸ்டுகளின் செயல்களை நியாயப்படுத்தும் விதமாக எழுதப்பட்டுள்ளது என ஏ.பி.வி.பி. அமைப்பு குற்றம் சாட்டியது. மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் கருத்துக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது என்று ஏ.பி.வி.பி. அமைப்பின் தமிழக இணை செயலாளர் சி.விக்னேஷ் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு பதிலாக வேறொரு பாடம் சேர்க்கப்பட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தி பதிவிட்டுள்ள அவர், “ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும். pic.twitter.com/vjKKybSSAR
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 12, 2020
Related Tags :
Next Story