உயிர்காக்கும் மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 108 புதிய ஆம்புலன்ஸ் சேவை - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்


உயிர்காக்கும் மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 108 புதிய ஆம்புலன்ஸ் சேவை - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Nov 2020 5:30 AM IST (Updated: 13 Nov 2020 3:31 AM IST)
t-max-icont-min-icon

108 ஆம்புலன்ஸ் என்ற அவசரகால ஊர்தி சேவைக்காக உயிர்காக்கும் மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 108 எண்ணிக்கையிலான புதிய அவசரகால ஊர்தி சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விபத்துகளை குறைக்கவும், உயிர் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கவும், 108 அவசரகால ஊர்தி சேவையை வலுப்படுத்துதல், விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், தலைக்காய பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

108 அவசரகால ஊர்தி சேவை திட்டத்தில் தற்போது 1,180 அவசரகால வாகனங்கள் இயங்கி வருகின்றன. 108 அவசரகால ஊர்தி சேவைகள் மூலமாக இதுவரை 25.34 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் உள்பட 1 கோடியே 2 லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.

சட்டசபையில் கடந்த மார்ச் 24-ந்தேதியன்று முதல்-அமைச்சர் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களுக்கு அவசர காலங்களில் உயிர்காப்பதில் சிறப்பாக சேவையாற்றி வரும் 108 அவசரகால ஊர்தி சேவையை மேலும் வலுப்படுத்துவதற்காக, நடப்பாண்டில் 500 புதிய அவசரகால ஊர்திகள் ரூ.125 கோடி செலவில் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், 108 அவசரகால ஊர்தி சேவைக்காக 500 ஊர்திகள் வாங்க ரூ.103 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக ரூ.20.65 கோடி மதிப்பீட்டில், உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 90 புதிய அவசரகால ஊர்திகள், கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியன்று முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

தற்போது, இரண்டாம் கட்டமாக ரூ.24.77 கோடி மதிப்பீட்டில் உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 108 எண்ணிக்கையிலான புதிய அவசரகால ஊர்திகளின் சேவைகளை தொடக்கி வைக்கும் அடையாளமாக, 9 ஊர்திகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் கே.சண்முகம், மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.உமாநாத், சுகாதாரத் திட்ட இயக்குனர் எ.சிவஞானம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story