சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மருமகள் உட்பட 3 பேர் கைது


சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மருமகள் உட்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2020 12:24 PM IST (Updated: 13 Nov 2020 12:24 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மருமகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தலில் சந்த் (வயது 74). சென்னை சவுகார்ப்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். வால்டாக்ஸ் சாலை விநாயகர் மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (38) ஆகியோருடன் வசித்துவந்தார். இவருடைய மகள் பிங்கி (35) திருமணமாகி பேசின்பிரிட்ஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் மாலை தலில் சந்த், புஷ்பா பாய், ஷீத்தல் ஆகியோர் துப்பாக்கி குண்டு பாய்ந்தநிலையில் ரத்தவெள்ளத்தில் படுக்கை அறையில் பிணமாக கிடந்தனர்.

பரபரப்பு மிகுந்த பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். குற்றவாளிகளை பிடிப்பதற்கு 5 தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர்.

அப்பகுதியில் பொறுத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், மகள் பிங்கி மற்றும் குடியிருப்புவாசிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் உடனடியாக துப்பு துலங்க தொடங்கியது. குடும்ப பிரச்சினையில் ஷீத்தலின் மனைவி ஜெயமாலா தனது சகோதரர்கள் கைலாஷ், விகாஷ் உள்ளிட்டோருடன் இணைந்து, இந்த கொடூர கொலைகளை செய்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

ஜெயமாலா மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர். இவருக்கும் ஷீத்தலுக்கும் திருமணமாகி புனேயில் சில ஆண்டுகள் வசித்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. எனவே ஷீத்தலுடன் வாழ பிடிக்காமல், புனே நீதிமன்றத்தில் ஜெயமாலா விவாகரத்து கோரியும், தனக்கு ஜீவனாம்சமாக ரூ.5 கோடி தர வேண்டும் என்று கூறியும் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இருவீட்டாருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஷீத்தலின் தந்தை தலில் சந்த் தனது உறவினர்களுடன் புனே சென்று ஜெயமாலா குடும்பத்தினரை கடுமையாக எச்சரித்து வந்ததாக தெரிகிறது. பதிலுக்கு ஜெயமாலா உறவினர்கள், சகோதரர்கள் கைலாஷ், விகாஷ் ஆகியோர் கடந்த மாதம் சென்னை வந்து தலில் சந்த் குடும்பத்தினரிடம் கடும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஷீத்தல், ஜெயமாலா ஆகியோர் இடையே ஏற்பட்ட விரிசல் இருவர் குடும்பத்தினர் இடையே தொடர்ந்து பகையை வளர்த்தது. இந்தநிலையில்தான் ஜெயமாலா, தனது சகோதரர்கள் கைலாஷ், விகாஷ், 2 உறவினர்கள் என 5 பேர் நேற்றுமுன்தினம் ஷீத்தல் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது மாமனார் தலில் சந்திடம், உடல்குறைபாடு உள்ள மகனை திருமணம் செய்து வைத்து என் வாழ்க்கையை சீரழித்துவிட்டீர்கள். எனவே எனக்கும், என்னுடைய குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவும் ரூ.5 கோடி ஜீவனாம்சம் தர வேண்டும். சொத்திலும் பங்கு தர வேண்டும்’ என்று கேட்டு ஜெயமாலா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு ஆதரவாக அவருடைய சகோதரர்களும், உறவினர்களும் குரல் கொடுத்தனர்.

அப்போது தலில் சந்த், ‘முதலில் நீங்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். எதுவாக இருந்தாலும் சட்டரீதியாக பார்த்துக்கொள்வோம்’ என்று கோபத்துடன் கூறியிருக்கிறார். ஷீத்தலும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி அவர்களை வெளியேற்ற முயற்சித்துள்ளார்.

எப்படியாவது தலில் சந்தின் குடும்ப சொத்தில் பங்கையும், ரூ.5 கோடி பணத்தையும் பெற்றுவிடலாம் என்ற முடிவோடு வந்திருந்த ஜெயமாலா குடும்பத்தினருக்கு ஏமாற்றமே மிஞ்சியதால் அது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால், மறைத்து வைத்து கொண்டுவந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியாவது சாதித்துவிட வேண்டும் என்று ஜெயமாலா குடும்பத்தினர் துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தலில் சந்த் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயமாலா குடும்பத்தினர், துப்பாக்கியை எடுத்து 3 பேரையும் அடுத்தடுத்து சுட்டனர்.

தலில் சந்தின் தாடை பகுதியிலும், புஷ்பா பாய் நெற்றியிலும், ஷீத்தலின் தலை உச்சியிலும் குண்டு பாய்ந்ததற்கான அடையாளம் உள்ளது.

3 பேரும் உயிரிழந்ததும் எந்தவித பதற்றமும் இல்லாமல் ஜெயமாலாவும், அவருடைய உறவினர்கள், சகோதரர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அவர்கள் முககவசம் அணிந்திருந்ததாலும், நடை, உடை, பாவனைகளை வைத்து வீட்டில் இருந்து வெளியே சென்றது ஜெயமாலாதான் என்பதை தலில் சந்தின் மகள் பிங்கி உறுதிப்படுத்தினார். அதன்பேரில் போலீசார் அவர்கள் சென்ற வழி முழுவதும் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க ஜெயமாலா குடும்பத்தினர் காரில் ஒரு குழுவாகவும், ரெயிலில் ஒரு குழுவாகவும் பிரிந்து சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் விமானம் மூலம் புனே சென்றுள்ளனர்.

காரில் செல்லும் நபர்களை பிடிக்க 2 தனிப்படையும், ரெயிலில் சென்ற நபர்களை பிடிக்க மற்றொரு தனிப்படையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. ரெயிலில் செல்லும் நபர்களை ஏதேனும் ரெயில் நிலையத்தில் மடக்கி கைது செய்வதற்காக ரெயில்வே போலீசார் உதவியையும் போலீசார் நாடியுள்ளனர். இடையில் எங்கும் இறங்கி அவர்கள் தப்பிச்செல்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில்  3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்ட ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரது உறவினர்கள் என மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருமகள் ஜெயமாலா, சகோதரர் கைலாஷ் உள்பட 3 பேர்  புனேவில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


Next Story