தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒரே நாளில் விமானங்களில் 20 ஆயிரம் பேர் பயணம்


தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒரே நாளில் விமானங்களில் 20 ஆயிரம் பேர் பயணம்
x
தினத்தந்தி 13 Nov 2020 7:40 PM GMT (Updated: 13 Nov 2020 7:40 PM GMT)

தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒரே நாளில் 20 ஆயிரத்து 500 பேர் விமானங்களில் பயணம் செய்தனர். இதனால் சென்னை விமான நிலையம் களை கட்டியது.

சென்னை,

தீபாவளி பண்டிகை இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பிற மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாட செல்ல வசதியாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்காக இருந்தாலும், விமான நிறுவனங்கள் கட்டணங்களை எத்தனை மடங்கு உயா்த்தினாலும் தீபாவளியை கொண்டாட விமானங்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்பவர்களை யாராலும் தடுத்துவிட முடியாது என்பதுபோல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு 100 விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த விமானங்களில் சுமாா் 11 ஆயிரத்து 500 போ் பயணம் செய்தனர். அதேபோல் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த 100 விமானங்களில் சுமாா் 9 ஆயிரம் போ் பயணம் செய்தனர். நேற்று ஒரே நாளில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 200 விமானங்களில் சுமாா் 20 ஆயிரத்து 500 போ் பயணம் செய்தனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று தான் முதல் முறையாக பயணிகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அதிகபட்சம் 15 ஆயிரத்தில் இருந்து 16 ஆயிரம் என்ற அளவில்தான் பயணிகள் எண்ணிக்கை இருந்தது. இதனால் கடந்த 8 மாதங்களில் நேற்றுதான் சென்னை உள்நாட்டு விமான நிலையம் மீண்டும் களை கட்டியது.

சென்னையில் இருந்து அதிகபட்சமாக கொல்கத்தாவுக்கு 7 விமானங்களில் சுமாா் 1,370 பேரும், டெல்லிக்கு 9 விமானங்களில் 1,100 பேரும், ஐதராபாத்துக்கு 10 விமானங்களில் 960 பேரும், கோவைக்கு 4 விமானங்களில் 710 பேரும், மதுரைக்கு 4 விமானங்களில் 690 பேரும், பெங்களூருக்கு 7 விமானங்களில் 360 பேரும் பயணம் செய்தனர்.

சிறிய ரக விமானங்களான தூத்துக்குடி செல்லும் 3 விமானங்கள், திருச்சி செல்லும் 2 விமானங்கள், சேலம் செல்லும் ஒரு விமானம் ஆகியவற்றிலும் இடம் காலி இல்லாமல் பயணிகள் கூட்டம் நிரம்பி இருந்தது. டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, கோவை ஆகிய இடங்களில் இருந்து சென்னை வந்த விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

Next Story