ஆரணி சிலிண்டர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
ஆரணி சிலிண்டர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த 4 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஆரணி சிலிண்டர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் மற்றும் நகரத்தில் வசிக்கும் முத்தம்மாள் என்பவரின் வீட்டில் இன்று காலை எரிவாயு கசிவு ஏற்பட்டு, சிலிண்டர் வெடித்ததில், காமாட்சி, சிறுவன் ஹேமநாதன் மற்றும் சந்திரா அம்மாள் ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த விபத்தில் நான்கு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துயர சம்பவத்தில் உயிரிழந்த காமாட்சி, சிறுவன் ஹேமநாதன் மற்றும் சந்திரா அம்மாள் ஆகிய மூன்று நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த காமாட்சி, சிறுவன் ஹேமநாதன் மற்றும் சந்திரா அம்மாள் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
பொதுமக்கள் தங்களது வீடுகளில் எரிவாயு சிலிண்டரை உபயோகிக்கும் போது, கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என இத்தருணத்தில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story