திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது.
தஞ்சை,
தஞ்சை அருகே திட்டை என்று அழைக்கப்படும் தென்குடிதிட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில், தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர், சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர்.
மற்ற எல்லா கோவில்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது. ஆனால் திட்டை கோவிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு குருபகவான் அருள்பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆவார். அதன்படி இந்த ஆண்டு இன்று இரவு 9.48 மணிக்கு குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருப்பெயர்ச்சி தீபாராதனை முடிந்த பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலில் அர்ச்சனை செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் பூஜை பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. மேலும் வசிஷ்டேஸ்வரர் சன்னதிக்குள் செல்லவும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக இலவச தரிசன வழி, சிறப்பு தரிசன வழி என 2 வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பக்தர்கள் நெரிசல் இன்றி சமூக இடைவெளியுடன் சென்று தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கம்புகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்குள் பக்தர்கள் செல்வதற்கு ஒருவழியும், தரிசனம் முடிந்தவுடன் வெளியே செல்வதற்கு ஒருவழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவில் குளத்தை சுற்றிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்ய தானியங்கி எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. வெப்பமானியை கொண்டு பக்தர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story