நெருங்கும் தேர்தல்: மு.க. அழகிரி தனிக்கட்சி தொடங்குவாரா...?அமித்ஷாவுடன் சந்திப்பா...? பரபரக்கும் அரசியல்


நெருங்கும் தேர்தல்: மு.க. அழகிரி தனிக்கட்சி தொடங்குவாரா...?அமித்ஷாவுடன் சந்திப்பா...? பரபரக்கும் அரசியல்
x
தினத்தந்தி 17 Nov 2020 9:30 AM IST (Updated: 17 Nov 2020 9:30 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மு.க. அழகிரி தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது சென்னை வரும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவைச் சந்திப்பாரா...? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

சென்னை

2021 சட்டமன்ற தேர்தலுக்கு அடுத்த மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணியை உறுதி செய்ய பல்வேறு யூகங்களில் ஈடுபட்டு உள்ளன. தி.மு.க. வும் தங்களது அணியில் இடம் பெறும் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் மறைமுக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. இவர் தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும், மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தவர்.

கடந்த 2013-ம் ஆண்டு கட்சியில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க.வுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தனர்.

இந்த நிலையில் மு.க.அழகிரி, கலைஞர் திமுக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவார் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன.

அழகிரி தொடங்கும் புதிய அரசியல் கட்சி ‘கலைஞர் திமுக’ அல்லது ‘க.தி.மு.க’ என்ற பெயரில் அமையலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. அழகிரியின் மகன் தயாநிதியும் புதிய கட்சியை ஆதரிக்கக்கூடும் என்று கூறுகின்றன. திமுக இளைஞர் அணிக்கு தலைமை தாங்கும் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியைப் போலவே, தயாநிதியும் க.தி.மு.க-வில் அதே போன்ற பதவியை ஏற்பார் என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

அதுபோல் அமித்ஷா மற்றும் அழகிரி இடையேயான சந்திப்பு நவம்பர் 21ம் தேதி சென்னையில் நடக்க வாய்ப்புள்ளது என்ற தகவலும் வெளியானது.இந்த சந்திப்பு இருவர் மட்டுமே சந்திக்கும் வகையில் இருக்கக்கூடும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் மதுரையில் வரும் நவம்பர் 20- ஆம் தேதி மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தனிக்கட்சி தொடங்குவது குறித்து மு.க.அழகிரி ஆதரவாளர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் இதுதொடர்பாக மு.க. அழகிரி ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்  கூறியதாவது:- “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்காவது ஆதரவு அளிப்பதா புதிய கட்சி தொடங்குவதா என்பது குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து பிறகே அது குறித்த முடிவை தெரிவிப்பேன் என கூறி உள்ளார்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக என்னுடைய ஆதரவாளர்களைச் சந்திக்கவில்லை. என்னுடைய ஆதரவாளர்கள் என்னிடம்தான் உள்ளனர். தற்போது திமுகவில் புகைச்சல் அதிகமாகிவிட்டது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு திமுகவின் நிலையை நீங்களே அறிந்துகொள்வீர்கள். அதை தற்போதே என்னால் கூற தேர்தலுக்குப் பிறகு அந்த நிலைமையை நீங்களே பார்க்கப் போகிறீர்கள். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது.” என்று மு.க. அழகிரி தெரிவித்தார்.

21 ந்தேதி சென்னை வரும் பா.ஜனதா தலைவர் அமித் ஷாவை சந்திக்க போவதாக வரும் தகவல்கள் குறித்த கேள்விக்கு அழகிரி மறுப்பு தெரிவித்தார். அவை கட்டுக் கதைகள். பாஜகவைச் சேர்ந்த யாரும் என்னிடம் பேசவில்லை. உள்துறை அமைச்சர் என்னை ஏன் சந்திக்கப்போகிறார் என கேள்வி எழுப்பினார்.

வரும் 20 ஆம் தேதி மு.க.அழகிரி தனிக் கட்சித் தொடங்குவது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசிக்க இருப்பதாகவும் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் இதுப் போன்ற தகவல் பரவி வருகிறது. இது தவறான தகவல் என்று முக அழகிரி தனது உதவியாளர் மூலம் தெளிவுப்படுத்தி உள்ளார்.



Next Story