அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை- மு.க.அழகிரி


அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை- மு.க.அழகிரி
x
தினத்தந்தி 17 Nov 2020 1:48 PM IST (Updated: 17 Nov 2020 1:48 PM IST)
t-max-icont-min-icon

அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என மு.க.அழகிரி கூறி உள்ளார்.

சென்னை

2021 சட்டமன்ற தேர்தலுக்கு அடுத்த மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணியை உறுதி செய்ய பல்வேறு யூகங்களில் ஈடுபட்டு உள்ளன. தி.மு.க. வும் தங்களது அணியில் இடம் பெறும் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் மறைமுக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. இவர் தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும், மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தவர்.

கடந்த 2013-ம் ஆண்டு கட்சியில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க.வுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தனர்.

இந்த நிலையில் மு.க.அழகிரி, கலைஞர் திமுக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவார் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன.

அழகிரி தொடங்கும் புதிய அரசியல் கட்சி ‘கலைஞர் திமுக’ அல்லது ‘க.தி.மு.க’ என்ற பெயரில் அமையலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. அழகிரியின் மகன் தயாநிதியும் புதிய கட்சியை ஆதரிக்கக்கூடும் என்று கூறுகின்றன. திமுக இளைஞர் அணிக்கு தலைமை தாங்கும் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியைப் போலவே, தயாநிதியும் க.தி.மு.க-வில் அதே போன்ற பதவியை ஏற்பார் என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

அதுபோல் அமித்ஷா மற்றும் அழகிரி இடையேயான சந்திப்பு நவம்பர் 21ம் தேதி சென்னையில் நடக்க வாய்ப்புள்ளது என்ற தகவலும் வெளியானது.இந்த சந்திப்பு இருவர் மட்டுமே சந்திக்கும் வகையில் இருக்கக்கூடும் என்று ம் கூறப்பட்டது.

இந்த நிலையில் மதுரையில் வரும் நவம்பர் 20- ஆம் தேதி மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தனிக்கட்சி தொடங்குவது குறித்து மு.க.அழகிரி ஆதரவாளர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதுகுறித்து மு.க.அழகிரி  மறுப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில்  அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஜனவரி அல்லது அதற்கு பிறகு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடததி அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து அறிவிப்பேன் என மு.க.அழகிரி கூறி உள்ளார்.


Next Story