மழை, வெள்ளம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்


மழை, வெள்ளம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
x
தினத்தந்தி 18 Nov 2020 12:53 PM IST (Updated: 18 Nov 2020 12:53 PM IST)
t-max-icont-min-icon

மழை, வெள்ளம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு பணியினை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பேரிடர் காலத்தில் மழை, வெள்ளம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அவ்வாறு ஆதாரமற்ற செய்திகளை வெளியிடும் சமூக வலைதங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ள உபரி நீர் வெளியேற்றம் தொடர்பாக அணைகள் மற்றும் ஏரிகளில் நிலவரங்களை பொதுப்பணி துறை உட்பட மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் பிற துறை அதிகாரிகள் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அளித்து வருகின்றனர். அந்த தகவல்களின் அடிப்படையில் அரசு தரும் அறிக்கைகள், அறிவிப்புக்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் 779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரி இன்னும் நிரம்பவில்லை. தற்போதைக்கு ஏரி திறக்கப்படாது. செம்பரபாக்கம் ஏரி நிரம்பும் போது அடையாறு ஆற்றில் குறைந்த அளவு நீர் மட்டும் வெளியேற்றப்படும் சூழல் தற்போது உள்ளது. மணிமங்கலம், சோமனூர் ஆகிய இடங்களில் தண்ணீர் அதிகமானாலும் அனைத்து சூழலையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது, இதற்கு போதுமான ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக தொடர்பாக முதல்வர் அடிக்கடி அதிகாரிகளை தொடர்புகொண்டு நிலைமையை கேட்டறிந்து அறிவுரைகளை வழங்கி வருகிறார்.உயிரிழப்பு இல்லாத பேரிடரை எதிர்கொள்ள வேண்டும் என்பதே அரசின் நிலை, உயிரிழப்புகள் தொடர்பாக மாவட்ட நிர்வாத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கையின் அடிப்படையில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story