மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை; விரைவில் முடிவை அறிவிப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி


மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை; விரைவில் முடிவை அறிவிப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 30 Nov 2020 9:45 PM GMT (Updated: 30 Nov 2020 9:06 PM GMT)

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்க மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், “விரைவில் முடிவை அறிவிப்பேன்” என்று பேட்டி அளித்தார்.

சென்னை, 

கடந்த 2017-ம் ஆண்டு ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’, என்று கூறி கால் நூற்றாண்டு கால ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு விடை தந்தார், நடிகர் ரஜினிகாந்த்.

‘சட்டமன்ற தேர்தலே தனது பிரதான இலக்கு’, ‘எம்.ஜி.ஆர். ஆட்சியை என்னாலும் தரமுடியும்’, என்றும் கூறி அரசியல் களத்தில் தனது முத்திரையை பதிக்க தொடங்கினார், ரஜினிகாந்த். இதையடுத்து ரஜினிகாந்தின் அரசியல் கட்சி எப்போது தொடங்கும்? என அவரது ரசிகர்கள் வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர்.

இந்தநிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் 38 பேருக்கும் சென்னை வரும்படி ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். பரபரப்பான அரசியல் சூழலில் மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன்படி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க ரஜினிகாந்த் நேற்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். காலை 9.55 மணிக்கு ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு வந்தார். அப்போது திரண்டிருந்த ரசிகர்கள் அவர் வந்த காரில் பூக்களை தூவினர். ‘நாளைய தமிழகம், சூப்பர் ஸ்டார்... அடுத்த முதல்வர்...’, என்பன போன்ற கோஷங்களையும் எழுப்பினர். ரசிகர்களின் வரவேற்பை ரஜினிகாந்த் ஏற்றபடி மண்டபத்துக்குள் நுழைந்தார்.

சரியாக காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம், கொரோனா களப்பணி முதலியவை குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் நிர்வாகிகள் மத்தியில் உருக்கமாக பேசியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:-

ஏற்கனவே கொரோனா பிரச்சினையால் நிலைமை சரியில்லாமல் இருக்கிறது. சில விஷயங்களை உங்களிடம் வெளிப்படையாக பேச விரும்புகிறேன். எனக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. பொதுவாக கொரோனா காலகட்டத்தில் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப கம்மியாகவே இருக்கிறது. ஒருநாளைக்கு 14 மருந்து சாப்பிடுகிறேன். வாழ்க்கை முழுவதும் நான் மருந்து, மாத்திரை சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

தேர்தல் வர கொஞ்சம் காலம் தான் இருக்கிறது. ஆனா கொரோனா பரவல் நிலையை கருத்தில்கொண்டால் தற்போது என் உடல்நிலை நேரடி மக்கள் பிரசாரத்துக்கு ஒத்துழைக்காது. ஆனால் நான் நேரடியாக மக்களை சந்திக்காமல், வெளியே வராமலேயே இருந்தால் வெற்றி கிடைக்காது. சமூக வலைதளங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாமே என்றுகூட நீங்க கேட்கலாம். ஆனால், சமூக வலைதளம் மூலமாக நாம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் அது 5 சதவீத தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும்.

நான் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு மக்களை சந்தித்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் கிடைக்கும். ஒருவேளை கட்சி தொடங்கி நான் நேரடியாக வராமல் தேர்தலை சந்தித்து, 10 அல்லது 15 சீட் கைப்பற்றுவது வெற்றி ஆகுமா? அந்த வெற்றி நிச்சயம் ஏற்புடையதாக இருக்காது. எனவே நான் நேரடியாக மக்களை சந்திக்காமல் வெற்றி கிடைக்காது. இப்போதைய சூழலில் என் உடல்நிலை நிச்சயம் அதற்கு இடம்கொடுக்காது. தமிழகம் முழுவதும் மக்களை நேரிடையாக சந்தித்து பிரசாரம் செய்தால் ஒழிய வெற்றிபெறவே முடியாது. என் கருத்தை சொல்லிட்டேன். இனி உங்கள் கருத்து தான் எனக்கு தேவை.

இவ்வாறு ரஜினிகாந்த் உருக்கமாக பேசினார்.

இதையடுத்து நிர்வாகிகள் பலர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என்று கருத்துகளை முன்வைத்தனர்.

இதுகுறித்து அவர்கள் பேசுகையில், “தலைவா... எங்களுக்கு நீங்கள் தான் முக்கியம். உங்கள் உடல்நலம் தான் முக்கியம். அரசியலுக்கு வரவேண்டாம். படங்களில் மட்டும் நடியுங்கள். குணசித்திர வேடங்களில் நடித்தால் கூட போதும். உங்கள் படங்களை பார்த்தே நாங்கள் மகிழ்வோம். ஆனால் தமிழகத்தில் வாரிசு அரசியல் உள்ளது. அந்த வாரிசு அரசியலுக்கு முடிவுகட்ட உங்களால் மட்டுமே முடியும். நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. 1996-ம் ஆண்டில் நீங்கள் ‘வாய்ஸ்’ கொடுத்தீர்கள். அதனாலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. அதேபோல இப்போதும் நீங்கள் ‘வாய்ஸ்’ கொடுக்கவேண்டும். தமிழகத்தில் வாரிசு அரசியல் தலைதூக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்”, என்று நிர்வாகிகள் பலர் ரஜினிகாந்திடம் தெரிவித்தனர்.

ஆனாலும் ஒரு சில நிர்வாகிகள் ரஜினிகாந்த் நிச்சயமாக அரசியலுக்கு வந்தாக வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து அவர்கள் பேசுகையில், “நீங்கள் (ரஜினிகாந்த்) நிச்சயம் அரசியலுக்கு வரத்தான் வேண்டும். நேரடியாக வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ‘வாய்ஸ்’ தேர்தலில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் அரசியலுக்கு நிச்சயம் வரவேண்டும்”, என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தத்தில் ‘தலைவா... நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அது நல்லதாகத்தான் இருக்கும். அந்த முடிவுக்கு நிச்சயம் நாங்கள் கட்டுப்படுவோம். உங்கள் பின்னால் நாங்கள் ஒருமித்து நிற்போம்’, என்று நிர்வாகிகள் அனைவரும் தெரிவித்தனர். நிர்வாகிகள் கருத்தை ரஜினிகாந்த் பொறுமையாக கேட்டார். பின்னர், ‘உங்கள் எல்லோரின் கருத்துகளையும் பரிசீலிப்பேன். நன்றாக யோசித்து ஒரு முடிவு எடுக்கிறேன்’, என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.

இந்த கூட்டம் காலை 11.50 மணிக்கு நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து காலை 11.55 மணிக்கு திருமண மண்டபத்தின் பால்கனி வழியாக ரஜினிகாந்த் வந்து திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்தார். ரசிகர்களை நோக்கி கையசைத்தார். கைகூப்பி வணங்கினார். அப்போது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். பின்னர் பகல் 12.08 மணிக்கு மண்டபத்தில் இருந்து காரில் போயஸ் கார்டன் இல்லம் நோக்கி புறப்பட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லம் திரும்பிய போது அங்கு ஏராளமான மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் திரண்டு அவரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்ட செயலாளர்களுடன் நடந்த சந்திப்பில் அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தார்கள். நானும் எனது கருத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்கள்கூட இருப்போம் என்று கூறினார்கள். நானும் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story