புயல் குறித்து பொதுமக்கள் பயப்பட தேவையில்லை - முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை
போர்க்கால அடிப்படையில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், புயல் குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
வங்க கடலில் ‘புரெவி’ புயல் உருவாகியுள்ள நிலையில் தென்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்எச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோரின் சீரிய கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள், கள நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து அதற்கு ஏற்ப வழங்கப்பட்ட குறிப்பான அறிவுரைகள் மற்றும் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சிறப்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக “நிவர்” புயலினால் ஏற்பட இருந்த அதிகப்படியான பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறைக்கப்பட்டன.
இதனை கருத்தில் கொண்டு பின்வரும் அறிவுரைகள் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது.
* கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
* தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளுக்கு கூடுதலாக 1,000 பணியாளர்களையும், கூடுதல் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின் கடத்திகளை பிற மாவட்டங்களில் இருந்து பெற்று தயார் நிலையில் வைக்கவேண்டும்.
* கொரோனா மற்றும் இதர தொற்று ஏற்படாத வண்ணம், அனைத்து நிவாரண முகாம்களிலும் கிருமி நாசினிகள், முக கவசங்கள் ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும்.
* கடலோர கிராமங்களில் கட்டுமரங்கள், மின் மோட்டார் பொருத்திய படகுகள், மீன் வலைகள் ஆகியவற்றை உரிய முறையில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.
* புயலால் பாதிக்கப்பட கூடிய இடங்களில் வாழ்கின்ற தென் மாவட்ட பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* அத்தியாவசிய பொருட்களான பேட்டரியில் இயக்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்கவேண்டும்.
அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க் கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் புயல் குறித்து எந்த வித அச்சமும் அடைய தேவையில்லை. அரசின் அறிவுரைகளுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story