வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயல் கன்னியாகுமரி-பாம்பன் இடையே நாளை மறுதினம் கரையை கடக்கிறது


வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயல் கன்னியாகுமரி-பாம்பன் இடையே நாளை மறுதினம் கரையை கடக்கிறது
x
தினத்தந்தி 2 Dec 2020 5:55 AM IST (Updated: 2 Dec 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

வங்க கடலில் நேற்று உருவான புரெவி புயல் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கரையை கடக்கிறது.

சென்னை, 

வங்க கடலில் கடந்த 24-ந்தேதி நிவர் புயல் உருவாகி, மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் வடமாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்தது. இதையடுத்து நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த மாதம் 28-ந்தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. 2-ந்தேதி (இன்று) இலங்கை கடலோர பகுதியை அடைந்து, 3-ந்தேதி (நாளை) மன்னார் வளைகுடா பகுதியைக் கடந்து, 4-ந்தேதி (நாளை மறுதினம்) தென் தமிழகத்தில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சீபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.

3-ந்தேதி (நாளை) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இந்த புயல் காரணமாக தென் மாவட்டங்களில் தான் பெரும்பாலான இடங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story