தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் சுரேந்திரன் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மார்னஸ் லபுஸ்சேன் நடராஜன் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். இது நடராஜனின் முதல் சர்வதேச விக்கெட் ஆகும். அதனை தொடர்ந்து 48-வது ஓவரில் ஆஸ்டன் அகர் விக்கெட்டை வீழ்த்தினார். இன்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜனுக்கு தமிழகத்தில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் எடுத்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர் நடராஜனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நம் பாரத திருநாட்டிற்காக தன்னுடைய திறமையான பந்துவீச்சால் முதல் போட்டியில் இரண்டு விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்து மேலும் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் துவக்கி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு நம் பாரத தேசத்திற்காக மென்மேலும் பல சாதனைகளை படைத்து நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story