குமரி மாவட்டத்தில் புரெவி புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன


குமரி மாவட்டத்தில் புரெவி புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன
x
தினத்தந்தி 3 Dec 2020 5:24 AM IST (Updated: 3 Dec 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் புயல், வெள்ளத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக உள்ளது. பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அணைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

நாகர்கோவில், 

வங்க கடலில் உருவான ‘புரெவி‘ புயல் இன்று (வியாழக்கிழமை) மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, நாளை தென் தமிழகத்தில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்‘ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழக அரசு உத்தரவின் பேரில் குமரி மாவட்டத்தில் தீவிர முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் கரை திரும்ப சேட்டிலைட் போன் மூலமாகவும், கப்பல்படை, கடலோர காவல்படை மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கேரளா, கர்நாடகா, மராட்டியம், லட்சத்தீவு பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களை கரை திரும்ப தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் புரெவி புயலை எதிர்கொள்ளவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் துணை கலெக்டர் தலைமையில் 9 மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலம் வாரியாக, பேரிடரினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளாக 76 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு இடத்துக்கும் 10 முன்கள பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 76 இடங்களில் 34 பகுதிகள் அதிக பாதிப்பு ஏற்படக்கூடியவையாக உள்ளன. மாவட்டம் முழுவதும் 12 பள்ளிகளில் பல்நோக்கு தற்காலிக முகாம்களும், 75 தற்காலிக முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 35 தற்காலிக முகாம்கள் விளவங்கோடு தாலுகா பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாழடைந்த கட்டிடம், ஆபத்தான காய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பேரிடர் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்க வசதியாக மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறை நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை 1077, 04652 231077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் 7-ந் தேதி வரை ஆற்றுப் படுகை, கடற்கரையோரங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்துக்கு தலா 20 பேர் கொண்ட 3 தேசிய பேரிடர் மீட்பு குழு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 குழுக்கள் ஏற்கனவே குமரி மாவட்டம் வந்து சேர்ந்தனர். அவர்களில் ஒரு குழுவினர் நாகர்கோவிலிலும், ஒரு குழுவினர் குளச்சலிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் குழுவினர் நேற்று கன்னியாகுமரி, அழிக்கால், பிள்ளைத்தோப்பு, ராஜாக்கமங்கலம்துறை ஆகிய கடற்கரை கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குளச்சலில் தங்கியுள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் குளச்சல் முதல் தூத்தூர் வரையுள்ள கடற்கரை கிராமங்களுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மற்றொரு குழுவினர் நேற்று இரவில் குமரி மாவட்டம் வந்து சேர்ந்தனர். அவர்களும் குளச்சலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர தமிழக காவல்துறையைச் சேர்ந்த மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு படையைச் சேர்ந்த 80 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து நேற்று காலை குமரி மாவட்டம் வந்தனர். அவர்கள் நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குமரி மாவட்டத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற போலீசார் 50 பேரும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 30 பேரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் குமரி மாவட்டத்தில் புரெவி புயல் மீட்பு பணிகளில் ஈடுபட 220 தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார்படுத்தப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் 1300 போலீசார் புயல் மீட்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இதேபோல் தீயணைப்புத்துறை சார்பில் உயிர் மீட்பு மற்றும் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் அகற்றும் பணியில் ஈடுபட 13 குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 4 மீட்புக்குழுவினரும் குமரி வந்துள்ளனர்.

புயல் காரணமாக மழை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்களது குடும்பத்துக்கு ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தண்ணீர் அதிகமாக தேங்கும் பட்சத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும், அதனால் பேட்டரி, டார்ச் லைட் போன்றவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் புரெவி புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து துறை அதிகாரிகளும் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். வெள்ள பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தற்காலிக முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

குமரி மாவட்ட மீனவர்களுக்கு கடந்த 27-ந் தேதியில் இருந்தே புயல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பி விட்டன. அவற்றில் பல விசைப்படகுகள் கேரளா, கர்நாடகா, மராட்டியம், குஜராத் மாநில துறைமுகங்களில் கரை சேர்ந்துள்ளன. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகளில் நேற்று இரவு நிலவரப்படி 118 விசைப்படகுகள் இன்னும் கரை திரும்ப வேண்டி உள்ளது. அதில் 65 விசைப்படகுகள் லட்சத்தீவு மற்றும் கேரள மாநில ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது புயல் கடக்கும் பாதையாக உள்ளது. எனவே அவர்களுக்கு கரை திரும்ப கப்பல்படை, கடலோர காவல்படை மூலம் தகவல் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்

Next Story