‘புரெவி’ புயல்: தென் தமிழக கடலோர பகுதியை இன்று நெருங்குகிறது
‘புரெவி’ புயல் தென் தமிழக கடலோர பகுதியை இன்று நெருங்குகிறது என்றும், கன்னியாகுமரி-பாம்பன் இடையே இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவோ, நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையோ கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வங்க கடலில் கடந்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து, புயலாக நேற்று முன்தினம் மாலை வலுப்பெற்றது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) மன்னார் வளைகுடா பகுதியை கடந்து தமிழக கடலோர பகுதிகளை அடைகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று (நேற்று முன்தினம்) இரவு புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இது இன்று பாம்பனுக்கு தென்கிழக்கே 370 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கே சுமார் 550 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை கடக்கிறது. பின்னர் 3-ந்தேதி (இன்று) காலை மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். அதனைத்தொடர்ந்து 3-ந்தேதி பிற்பகலில் பாம்பனை ஒட்டி வருகிறது. பிற்பகலுக்கு மேல் தென் தமிழக கடலோர பகுதிகளை கடந்து 3-ந்தேதி இரவு அல்லது 4-ந்தேதி அதிகாலையில் புரெவி புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நேரத்தில் மணிக்கு 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் தென் கடலோர மாவட்டங்களில் பிற்பகல் 3 மணி முதல் தெரியும். இதன்காரணமாக சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய அதி கனமழை நாளை (இன்று) பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
4-ந்தேதி (நாளை) தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் (இன்றும், நாளையும்) நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்கிழக்கு வங்க கடல், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசுவதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story