தீவிரமடையும் புயல்; தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை
வங்க கடலில் தீவிரமடைந்துள்ள புயலை முன்னிட்டு தேசிய பேரிடர் மீட்பு படைகள் தமிழகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
சென்னை,
வங்க கடலில் கடந்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து, புயலாக நேற்று முன்தினம் மாலை வலுப்பெற்றது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) மன்னார் வளைகுடா பகுதியை கடந்து தமிழக கடலோர பகுதிகளை அடைகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.
இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை கடக்கிறது. பின்னர் 3-ந்தேதி (இன்று) காலை மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். அதனைத்தொடர்ந்து 3-ந்தேதி பிற்பகலில் பாம்பனை ஒட்டி வருகிறது. பிற்பகலுக்கு மேல் தென் தமிழக கடலோர பகுதிகளை கடந்து 3-ந்தேதி இரவு அல்லது 4-ந்தேதி அதிகாலையில் புரெவி புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நேரத்தில் மணிக்கு 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் தென் கடலோர மாவட்டங்களில் பிற்பகல் 3 மணி முதல் தெரியும். இதன்காரணமாக சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய அதி கனமழை நாளை (இன்று) பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
புயலை முன்னிட்டு தேசிய பேரிடர் மீட்பு படைகள் தமிழகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதன்படி, புயல் பாதிப்பு முதலில் அதிகம் இருக்க கூடிய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 குழுக்கள் சென்றுள்ளன. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மற்றும் நாகை மாவட்டங்களுக்கு தலா 2 குழுக்களும், நெல்லை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தலா 3 குழுக்களும் மீட்பு பணிக்காக சென்றுள்ளன.
இதேபோன்று மதுரை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு குழு மீட்பு பணிக்கென அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story