ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி... யார் இவர்?


ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி... யார் இவர்?
x
தினத்தந்தி 3 Dec 2020 3:35 PM IST (Updated: 3 Dec 2020 3:35 PM IST)
t-max-icont-min-icon

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி. யார் இவர் இதற்கு முன் என்ன செய்து கொண்டு இருந்தார்.

சென்னை

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்திருந்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கொரோனா காரணமாக அவர் கட்சி அறிவிப்பு தாமதமாகி கொண்டே வந்தது. இதனிடையே எப்போது கட்சி தொடங்குவது என்பது குறித்து தொடர்ந்து தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜனிகாந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில், ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், டிசம்பர் 31-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் டுவிட்டரில் அறிவித்திருந்தார். 

இது குறித்து பேட்டி அளித்த ரஜினிகாந்த்  என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். அரசியல் மாற்றம் தேவை... கட்டாயம் நிகழும். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம் தான். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்து விட்டது.  தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன் என கூறினார்.

மேலும் ரஜினியின் அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமனம்; கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி நீண்டகாலமாக முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்துவந்தார். அவரின் நெருங்கிய நட்பு வட்டத்திலும் இருந்துவந்திருக்கிறார். முரசொலி மாறனின் மறைவுக்குப் பின்னர், தி.மு.க-விலிருந்து விலகிய இவர், தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் மீது அதிக பற்றுக்கொண்ட இவர், முதலில் பா.ஜ.க-வின் வர்த்தகப் பிரிவில் பதவி வகித்துவந்தவர்.

பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்துவந்தார்.  இந்தநிலையில், ரஜினி கட்சியில் இணைந்த அர்ஜுனமூர்த்தி, பா.ஜ.க-வின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்திருந்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்திருக்கிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அர்ஜுனமூர்த்தி நீக்கப்படுவதாகவும் பா.ஜ.க சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இவரின் மனைவி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பள்ளித் தோழி. டெல்லி, தமிழக பா.ஜ.க தலைமையுடன் நெருக்கமாக இருந்த இவர், பல்வேறு தொழில்களையும் நடத்திவருகிறார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் டுவிட்டர் பக்கம் உட்பட அவரின் அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளையும் அர்ஜுனமூர்த்தியின் குழுதான் கவனித்துவருகிறது

Next Story