ரசிகர்களுக்கு இன்று தான் உண்மையான தீபாவளி - தமிழருவி மணியன்
ரசிகர்களுக்கு இன்று தான் உண்மையான தீபாவளி என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், வரும் ஜனவரியில் கட்சியை துவங்க உள்ளதாகவும், டிசம்பர் 31ல் அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“வெறுப்பு அரசியல் வேறூன்றி இருக்கும் தமிழகத்தில், அன்பு சார்ந்து, சாதி மத பேதம் இல்லாமல், அனைவரையும் அன்பினால் ஆரத்தழுவுகிற ஆன்மிக அரசியலை ரஜினிகாந்த் இன்று அரங்கேற்றுகிறார். தமிழகத்திற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே இந்த ஆன்மீக அரசியல் என்பது ஒரு புதிய திசையை காட்டக்கூடியதாக அமையும்.
தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையிலும், மருத்துவர்கள் கொடுத்திருக்கும் எச்சரிக்கையை புறக்கணித்துவிட்டு மக்கள் நலனுக்காகவும், மாற்று அரசியல் இந்த மண்ணில் நிகழ வேண்டும் என்பதற்காகவும் ரஜினிகாந்த் இந்த வேள்வியில் இறங்கியிருக்கிறார்.
ரஜினிகாந்தை உயிருக்கும் மேலாக போற்றி மகிழும் ரசிகர்களுக்கும், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை இவர் ஒருவரால் தான் தரமுடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கும் இன்று தான் உண்மையான தீபாவளித் திருநாள் ஆகும்.
மாற்றத்தை நோக்கி அவர் புறப்பட்டு விட்டார். அவருக்கு என்னால் ஆன அனைத்தையும் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story