அதிமுக அரசின் மீது வேண்டுமென்றே திமுக தலைவர் ஸ்டாலின் குறைகூறி வருகிறார் - முதலமைச்சர் பழனிசாமி


அதிமுக அரசின் மீது வேண்டுமென்றே திமுக தலைவர் ஸ்டாலின் குறைகூறி வருகிறார் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 3 Dec 2020 4:08 PM IST (Updated: 3 Dec 2020 4:08 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக ஆட்சியில் டெண்டர் விட்டதில் ஊழல் நடைபெறவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். இதில் சேலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சி ஆணையாளர், பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

மேலும் சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“சேலத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். மாவட்டத்தில் 39,317 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸை படிப்படியாக குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 26 பேருக்கு மருத்துவ சீட் கிடைத்துள்ளது. 

சென்னையில் ரூ.965 கோடியில் ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் நடைபெறுகின்றன. அரசின் திட்டங்களை பற்றி அறியாமல் தினமும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு வருகிறார். அதிமுக அரசின் மீது வேண்டுமென்றே குறைகூறி வருகிறார்.

ஆன்லைன் டெண்டரில் ஊழல் நடப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆன்லைன் டெண்டரில் யார் வேண்டுமானாலும் ஒப்பந்தப் புள்ளி கோரலாம். ஆன்லைனிலேயே டெண்டர், ஆன்லைனிலேயே பணம் செலுத்தும் நடைமுறையில் எப்படி ஊழல் நடக்கும்? அதிமுக ஆட்சியில் டெண்டர் விட்டதில் ஊழல் நடைபெறவில்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story