நாட்டின் 2-வது சிறந்த போலீஸ் நிலையமாக சேலம் மகளிர் போலீஸ் நிலையம் தேர்வு
நாட்டிலேயே 2-வது சிறந்த போலீஸ் நிலையமாக சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2015-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில், நாட்டில் உள்ள போலீஸ் நிலையங்களை ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் தலைசிறந்த 10 போலீஸ் நிலையங்கள் (டாப் 10) மத்திய உள்துறை அமைச்சகத்தால் அடையாளம் காட்டப்படுகின்றன.
நகை, சொத்து தொடர்பான குற்றங்களின் பேரிலும், பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு எதிரான குற்றங்களின் பேரிலும் எடுத்த நடவடிக்கை, காணாமல் போன நபர்கள், அடையாளம் தெரியாத உடல்களை கண்டுபிடிப்பதில் உள்ள திறமை போன்றவற்றின் அடிப்படையில் தரவு பகுப்பாய்வு, நேரடி கண்காணிப்பு, பொதுமக்களின் பின்னூட்டத்தை கருத்தில்கொண்டு ‘டாப் 10’ போலீஸ் நிலையங்கள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
மணிப்பூர் முதலிடம்
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான போலீஸ் நிலைய தரவரிசைப் பட்டியல் கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில், கடுமையான சிரமங்களுக்கு இடையே தயாரிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் உள்ள 16 ஆயிரத்து 671 போலீஸ் நிலையங்களை பகுப்பாய்வு செய்து தயாரிக்கப்பட்ட அந்த பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் மணிப்பூர் மாநிலத்தின் தவுபால் மாவட்டத்தில் உள்ள ‘நோங்போக்சேக்மாய்’ போலீஸ் நிலையம், நாட்டிலேயே தலைசிறந்த போலீஸ் நிலையமாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது.
இதில், 2-வது இடத்தை சேலம் மாநகராட்சியில் உள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் பிடித்துள்ளது. 3 முதல் 10 வரையுள்ள இடங்கள் முறையே அருணாசலபிரதேசம், சத்தீஷ்கார், கோவா, அந்தமான், சிக்கிம், உத்தரபிரதேசம், தாத்ரா நாகர்ஹவேலி மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் போலீஸ் நிலையங்கள் பிடித்துள்ளன.
ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையம் நாட்டிலேயே தலைசிறந்த போலீஸ் நிலையமாகவும், 2018-ம் ஆண்டு தேனி பெரியகுளம் போலீஸ் நிலையம் 8-வது சிறந்த போலீஸ் நிலையமாகவும், கடந்த ஆண்டு தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் 4-வது சிறந்த போலீஸ் நிலையமாகவும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story