வன்னியர் தனி இட ஒதுக்கீடு: கிராம அளவிலான போராட்டத்திற்கு தயாராவீர் - தொண்டர்களுக்கு, டாக்டர் ராமதாஸ் அழைப்பு
வன்னியர் தனி இட ஒதுக்கீடு குறித்து கிராம அளவிலான போராட்டத்திற்கு தயாராவீர் என்று தொண்டர்களுக்கு, டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சமூகநிலையில் மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய சமுதாயம் முன்னேற வேண்டுமானால், அதற்கு அடிப்படைத் தேவை 20 சதவீத தனி இட ஒதுக்கீடு ஆகும். அதனால்தான் அந்த கோரிக்கையை வலியுறுத்தி 40 ஆண்டுகளாக நாம் போராடி வருகிறோம். அந்தக் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக 1-ந் தேதி முதல் அறவழிப் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரும் நமது போராட்டம் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் பெற்றுள்ளது. சென்னையில் இம்மாதம் 4-ந்தேதி (இன்று) வரை நடைபெறவுள்ள போராட்டங்களைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 16,743 வருவாய் கிராமங்களை நிர்வகிக்கும் 12,621 கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன்பாகவும் வரும் 14-ந்தேதி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறவிருக்கிறது. கிராமங்களில் நடைபெறவுள்ள மக்கள்திரள் போராட்டங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட வேண்டும். போராட்டத்திற்கு தயாராவீர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story