மதுரைக்கு குடிநீர் விநியோக திட்டம் 2023 ல் நிறைவு பெறும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் விநியோக திட்டம் 2023 ல் நிறைவு பெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரை,
மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1,295 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் 4 சிப்பங்களாக செயல்படுத்தப்படுகிறது. அதற்கான டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதன்தொடர்ச்சியாக இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
மேலும் அவர் இந்த விழாவில் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் உள்பட ரூ.69 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அனைத்து துறைகளிலும் தமிழக அரசு முத்திரை பதித்து வருகிறது. குடிநீர் பிரச்சினைக்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தேர்தலை மையமாக கொண்டு அரசை விமர்சிக்கிறார். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் விநியோக திட்டம் 2023 ல் நிறைவு பெறும்.
புதிய திட்டத்தால் மதுரையில் 1.10 லட்சம் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.
முன்னதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது;-
ஒரு குறையும் சொல்ல முடியாத அளவிற்கு ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டவர் ஸ்டாலின். பூட்டிய அறைக்குள் இருந்து அரசியல் பேசுகிறார் ஸ்டாலின் என்றார்.
Related Tags :
Next Story