காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் - வானிலை மைய இயக்குனர் தகவல்


காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் - வானிலை மைய இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 5 Dec 2020 2:39 PM IST (Updated: 5 Dec 2020 3:30 PM IST)
t-max-icont-min-icon

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தமிழகத்தில் மழை தொடர்பான விவரங்களை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது;- 

“மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கக் கூடும். 

இதன் காரணமாக கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

நாளை ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மேலும் கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகளுக்கும் நாளை கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story