இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: ரெயில் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ரெயில் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை,
இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், ரெயில் நிலையங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், சென்னை ரெயில்வே காவல் மண்டலத்துக்குட்பட்ட ரெயில் நிலையங்களில் 900 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இன்று தமிழக ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படையினர், சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல், எழும்பூர், கோவை, மதுரை, ஈரோடு, சேலம் உள்பட அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால், சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அந்த சிறப்பு ரெயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் தான் பயணிக்க முடியும். மேலும், தீவிர சோதனைக்கு பிறகே ரெயில்வே பாதுக்காப்புப்படையினர் பயணிகளை ரெயில்களில் பயணிக்க அனுமதித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கூடுதலாக, போலீசார் ரெயில் நிலையங்களில் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மோப்ப நாய்கள், ‘மெட்டல் டிடெக்டர்’ உதவியுடன் ரெயில் நிலையங்கள், ரெயில்கள் மற்றும் தண்டவாளங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படையினரும், ரெயில்வே போலீசாரும் மோப்ப நாய் உதவியுடன் ரெயில் நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை ரெயில்வே சூப்பிரண்டு ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை ரெயில்வேயை பொருத்தவரையில் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ரெயில்வேயில் உள்ள 4 துணை மண்டலங்களில் 900 ரெயில்வே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேப்போல் சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் 300 ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
சேலம், கோவை, ஈரோடு போன்ற முக்கிய ரெயில் நிலையங்களில் தலா 100-க்கு மேற்பட்ட போலீசார் இன்று முதல் நாளை வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பயணிகள் அவசர உதவி எண் 1512-ஐ தொடர்பு கொண்டும் புகார்களை தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.
மேலும் ரெயில்வே பாதுகாப்புப்படை சார்பிலும் சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரெயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story