எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் கோவேக்சின் தடுப்பு மருந்து 3-ம் கட்ட பரிசோதனை இன்று தொடக்கம்


எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் கோவேக்சின் தடுப்பு மருந்து 3-ம் கட்ட பரிசோதனை இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 7 Dec 2020 3:14 AM IST (Updated: 7 Dec 2020 3:14 AM IST)
t-max-icont-min-icon

சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை இன்று தொடங்கப்பட உள்ளது.

சென்னை, 

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரிக்க தொடங்கியதை முன்னிட்டு, பல்வேறு நாடுகளில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அந்த வகையில் ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட உலக முன்னணி நாடுகள் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியை தொடங்கினர்.

இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. அதைத்தொடர்ந்து ‘கோவேக்சின்’ என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அந்த வகையில் தமிழகத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்களத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனை ‘கோவேக்சின்’ பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து 30 தன்னார்வலர்கள் கொண்டு முதற்கட்ட பரிசோதனை கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 50 தன்னார்வலர்கள் கொண்டு 2-ம் கட்ட பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்த 2 பரிசோதனைகளும் வெற்றி பெற்றதை முன்னிட்டு, இன்று (திங்கட்கிழமை), எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 3-ம் கட்ட ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தின் பரிசோதனை தொடங்க உள்ளது. இதுகுறித்து அம்மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாவது.

‘கோவேக்சின்’ மருந்தின் முதல் 2 கட்ட பரிசோதனைகள் மிகவும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர்களுக்கு எந்த ஒரு பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த 2 கட்ட பரிசோதனை முடிவுகள் ஐ.சி.எம்.ஆர்.க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3-ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதற்காக ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பரிசோதனை ஐ.சி.எம்.ஆரின் வழிகாட்டுதலின்படி இன்று தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story