3 வாலிபர்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தொழிலாளி போலீசுக்கு பயந்து, தானும் தீக்குளித்து தற்கொலை
ராஜாக்கமங்கலம் அருகே 3 வாலிபர்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தொழிலாளி போலீசுக்கு பயந்து தானும் தீக்குளித்தார். இதில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் தெக்கூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 40), தொழிலாளி. இவருக்கும், பக்கத்து ஊரைச் சேர்ந்த கோவில் பூசாரிக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதனால், சம்பவத்தன்று ராஜசேகரன், பூசாரி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும் பூசாரி மீதும், அவரது மனைவி மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தி துரத்தினர். பின்னர் ராஜசேகரன் தனது வீட்டுக்கு வந்து தகாத வார்த்தையால் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் வெங்கடேஷ், சதீஷ், காளி ஆகியோர் ஆபாசமான வார்த்தைகளை பேசாதீர்கள் என தட்டிக் கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையேயும் வாக்குவாதம் உருவானது. மேலும் 3 பேர் மீதும் ராஜசேகரனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
சிறிது நேரம் கழித்து அந்த பகுதியில் உள்ள நூலகம் அருகில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் 3 பேர் மீதும், திடீரென ராஜசேகரன் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு ஓடிவிட்டார். இதில் 3 பேர் உடலிலும் தீப்பிடித்தது. இதில் வெங்கடேஷ், சதீஷ் படுகாயமடைந்தனர். காளிக்கு லேசான காயமும் ஏற்பட்டது.
இதற்கிடையே வீட்டில் பதுங்கியிருந்த ராஜசேகரன், போலீசுக்கு பயந்து தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story