சமூக வலைத்தளத்தில் அய்யாக்கண்ணு மீது அவதூறு பரப்பிய தி.மு.க. பிரமுகர் கைது


சமூக வலைத்தளத்தில் அய்யாக்கண்ணு மீது அவதூறு பரப்பிய தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2020 4:15 AM IST (Updated: 7 Dec 2020 3:39 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளத்தில் அய்யாக்கண்ணு மீது அவதூறு பரப்பிய தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு. இவர் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு டெல்லியில் சங்க நிர்வாகிகளுடன் நீண்ட நாட்கள் போராட்டம் நடத்தினார்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அய்யாக்கண்ணு போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவிடம் பணம் பெற்று கொண்டு தான் அய்யாக்கண்ணு போராட்டத்தை கைவிட்டதாக அவதூறு பரப்பப்பட்டது. இதுகுறித்து அய்யாக்கண்ணு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தார்.

அதில், “சமூக வலைத்தளத்தில் தன் மீது அவதூறு பிரசாரம் பரப்பப்படுவதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து கமிஷனரின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு, அய்யாக்கண்ணு பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஜெயச்சந்திரனை (வயது 40) உறையூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதற்கிடையே மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருச்சியில் இருந்து புறப்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 2 முறை அவர் டெல்லி செல்ல முயன்றும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். தற்போது அய்யாக்கண்ணுவை வெளியே விடாமல் போலீசார் வீட்டுக்காவலில் வைத்து இருக்கிறார்கள். அவருடைய வீட்டு முன்பு உறையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story