தமிழகத்தில் கொரோனா தொற்றை மேலும் குறைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை - அமைச்சர் விஜயபாஸ்கர்


தமிழகத்தில் கொரோனா தொற்றை மேலும் குறைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 7 Dec 2020 8:11 AM IST (Updated: 7 Dec 2020 8:11 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா தொற்றை மேலும் குறைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில், புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்க கூடுதலாக 240 நடமாடும் குழுக்களை நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் ச.திவ்யதர்ஷினி, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சிறப்பு அதிகாரிகள் டாக்டர் பா.வடிவேலன், என்.சித்ரா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 

இதைத்தொடர்ந்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் கூடுதலாக 60 நடமாடும் மருத்துவ குழுக்களும், வாகனங்களில் பொறுத்தப்பட்ட 65 புகை தெளிப்பான்கள், குடிநீர் குளோரின் அளவை சரிசெய்யும் குளோரினேஷன் குழுக்கள் 15-ம், நோய் தொற்று தடுப்பு குழுக்கள் 15 உள்ளிட்ட 240 நடமாடும் குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்ததற்கு பிறகும் நோய் பரவும் அபாயம் ஏற்படாமல் இருக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. எங்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதோ அங்கு மருத்துவ குழுக்கள் அனுப்பப்படும். கடந்த 7 நாட்களில் மட்டும் பணியில் இருந்த மருத்துவ குழுக்கள் மூலம் 2 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் பொதுமக்களுக்கு மழையால் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். மருத்துவ குழுவினருடன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் உள்ளது.

தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பு எங்கும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது. மழை காலம் என்பது சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலான ஒன்று. இந்த காலத்தில் எந்த அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த இடங்களில் பணியாளர்களை அதிகப்படுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மழை பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை மேலும் குறைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. தொடர்ந்து அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின்(ஐ.சி.எம்.ஆர்.) வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பு மருந்தின் சோதனை 2-ம் கட்டத்தில் இருந்து வருகிறது. இதுவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story