முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் கடலூர் பயணம்
வெள்ள சேதங்களை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் கடலூருக்கு புறப்பட்டு செல்கிறார்.
சென்னை,
வெள்ள சேதங்களை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கடலூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். நாகை, மயிலாடுதுறையில் நாளை (புதன்கிழமை) ஆய்வு நடத்துகிறார்.
தமிழகத்தில் சமீபத்தில் தாக்கிய ‘நிவர்’ புயலால், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததுடன், பல்வேறு வகையான பயிர்களும் சேதமடைந்தன.
இந்த புயல் தாக்குதல் அடங்குவதற்கு முன்பாக, ‘புரெவி’ புயல் உருவானது. ஆனால், அந்தப்புயல் தமிழகத்தை நெருங்குவதற்கு முன்பாகவே வலுவிழந்துவிட்டது. ஆனாலும், கடலூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து பலத்த சேதங்களை ஏற்படுத்திவிட்டது.
இந்த நிலையில், ‘நிவர்’ புயல் வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். இந்த குழுவினர் 2 பிரிவாக பிரிந்து சென்று நேற்று முன்தினம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டனர். நேற்று புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், வெள்ள சேதங்களை முழுமையாக பார்வையிட்ட மத்திய குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது, தமிழக வெள்ள பாதிப்பு, புயல் சேதங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
இந்த சந்திப்புக்கு பிறகு காலை 11.30 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக காரில் கடலூர் புறப்பட்டு செல்கிறார். ஏற்கனவே, கடந்த மாதம் 26-ந்தேதி ‘நிவர்’ புயல் பாதிப்புகளை பார்வையிட எடப்பாடி பழனிசாமி கடலூர் சென்றார். தற்போது, 10 நாள் இடைவெளியில் மீண்டும் அங்கு செல்கிறார்.
இன்று மதியம் முதல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் பார்வையிடுகிறார். மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின்னர், சிதம்பரம் பகுதியில் பாதிப்புகளை பார்வையிடும் அவர், இரவு நாகை செல்கிறார்.
இன்று இரவு நாகப்பட்டினத்தில் தங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை (புதன்கிழமை) காலை 7.30 மணிக்கு நாகை மாவட்டத்திலும், முற்பகலில் திருவாரூர், நன்னிலம் பகுதியிலும், பிற்பகலில் மயிலாடுதுறை சீர்காழி பகுதியிலும் சேதப்பகுதிகளை பார்வையிடுகிறார்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து, நிவாரண பொருட்களை வழங்குகிறார். அதன்பிறகு, சாலை மார்க்கமாக கார் மூலம் சென்னை திரும்புகிறார்.
Related Tags :
Next Story