தமிழகத்தில் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையம் தயார் - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
தமிழகத்தில் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை,
தமிழகத்தில் அனைத்து மருத்துவ கல்லூரிகளில் 2-ம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தால் மட்டுமே வகுப்புக்கு செல்ல அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினமே சொந்த ஊர்களில் இருந்து கல்லூரிக்கு மாணவர்கள் படையெடுக்க தொடங்கினர். இதையடுத்து அந்தந்த மருத்துவ கல்லூரிகளிலேயே, அங்கு வரும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அனைத்து மாணவர்களும் முக கவசம் அணிந்து வந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ உதவியுடன் உடலின் வெப்பநிலை சோதனை செய்த பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று முதல் நாள் மாணவர்களின் வருகைக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அந்த மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி உடன் இருந்தார்.
பின்னர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவதால், அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில் 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் மூலம் மாணவர்கள் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்தல், சுகாதார பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் நோய் விலகி விட்டது என்று எண்ணி அலட்சியம் கொள்ளாமல், கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்டவைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கான பாதுகாப்புடன் சேமித்து வைக்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு தடுப்பூசி வினியோகித்தல் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் தரவில்லை. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் எவ்வாறு வினியோகிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story