சென்னையில் தாய் மகள் உயிரிழந்த சம்பவம்: முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
சென்னையில் பைக்கில் இருந்து தவறி மழை நீர் கால்வாயில் விழுந்து தாய் மகள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வந்த தனியார் மருத்துவக்கல்லூரி பேராசிரியை கரோலின் பிரிசில்லா, தனது மகள் இவாலினுடன் நேற்று முன்தினம் மாலை மொபட்டில் சூப்பர் மார்க்கெட் சென்றார். தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலையில் நொளம்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி மழைநீர் கால்வாய்க்குள் மொபட் விழுந்ததில் தாய்-மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னையில் பைக்கில் இருந்து தவறி மழை நீர் கால்வாயில் விழுந்து தாய் மகள் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணைய நோட்டீஸ் விடுத்துள்ளது.
இந்த நிலையில் சென்னை நொளம்பூரில் பைக்கில் இருந்து தவறி மழை நீர் கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த சம்பவத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
6.12.2020 அன்று இரவு சுமார் 7 மணியளவில் நொளம்பூர் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த திருமதி.கெரோலின் பிரமிளா (வயது 50) மற்றும் அவரது மகள் இவரின் (வயது 20) ஆகியோர் தவறி மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து உயிரிழந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க ஆணையிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story